About

Wednesday 5 February 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி

தொடரும் நம் சூழல் பயணங்கள் XII
சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடந்த 13/1/2014 அன்று, மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்க்குறிச்சி - சிவசைலத்தில் உள்ள "ஔவை ஆசிரமத்திற்க்கு" சென்றிருந்தேன். நான் படித்தது ஆழ்வார்க்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் தான். வெகு நாட்களுக்கு பிறகு அந்த கல்லூரி சாலையும், அங்குள்ள சாலை ஓர மரங்களும் என் கல்லூரி ஆசிரியர்களையும், என் நண்பர்களையும் நினைவூட்டியது.. இந்த நினைவுகளுடனே நான் கல்லூரியைக் கடந்து ஔவை ஆசிரமத்தை அடைந்தேன். சரியான நேரத்திற்கு நான் சென்றுவிட்டேன். அன்றுதான் எனக்கு தெரியும், இந்த ஆசிரமம் காந்தி கிராம அறக்கட்டளையின் நேரடி கட்டுபாட்டில் இயங்குகிறதென்று…  ஆசிரியையை சந்தித்துவிட்டு நான் வகுப்பிற்குள் சென்றேன். அனைவரின் அறிமுகத்திற்கு பின்பு மிக எளிமையான பாலுட்டிகள் பற்றிய விளக்கத்துடன் வகுப்பு ஆரம்பமானது. 





அவர்கள் தினமும் காணக்கூடிய விலங்குகளை கேட்டு தெரிந்து கொண்டேன். இதில் பலர் பறவைகளையும் பாலுட்டிகளையும் சேர்த்து, மிக ஆர்வமாக மைனா, கிளி, குருவி, நாய், எறும்பு, முயல், வௌவால் எனச் சொன்னனர். பெரிய மற்றும் சிறிய பாலுட்டிகள் பற்றி உதாரணங்களுடன் விளக்கினேன். சற்று வகுப்பு அமைதியான உடன் "வங்காரி மாதாய்" வாழ்கையை ஒரு சிறிய கதைபோல சொல்லிவிட்டு, ஒரு சிட்டு குருவியின் கதையை கூறினேன். பின்பு ஒரு "சுற்றுச்சூழலும் விலங்குகளும்" என்ற ஒரு வீடியோவைக் காட்டிவிட்டு "attitude assessment" என்ற செயல்பாட்டை வகுப்பிறகுள் செய்தேன். அனைவரும் இதில் ஆர்வமாக கலந்துகொண்டு சிறிய பாலுட்டிகள் பற்றி நேர்மறை, எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.  





மீண்டும் ஒருமுறை சிறிய பாலுட்டிகளைப் பற்றி உதாரணங்களுடன் சொன்னேன். பின்பு அங்குள்ள அனைவரையும் ஏழு குழுக்களாக பிரித்துவிட்டு, குழுவிற்கொரு குழுத் தலைவரையும் நிர்ணயத்துவிட்டு தொடர்ச்சியாக முயல், காட்டு அணில், வௌவால், முள்ளெலிகள் குறித்து பல வியக்கத்தக்க தகவல்களை சொன்னேன்.  பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு ஒவ்வொரு குழுத் தலைவரும் நான் சொன்ன தகவல்களை திரும்ப சொல்லவேண்டும். எந்த குழு மிக அதிக அளவு தகவல்களை கிரகித்துகொண்டு  மிக சிறப்பாக சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கும், அவர்களின் புரிந்துகொள்ள்ளும் திறனையும் தெரிந்து கொள்வதற்காக இதை செய்தேன். இதில் மூன்று குழுக்கள் மிக சிறப்பாக பல செய்திகளை மழைச் சாரல் போல தகவல்களை சொன்னார்கள். கைத்தட்டல்களை பெற்றார்கள்.







பின்பு வௌவால் பற்றிய ஒரு "வரைபட நிகழ்வை" பதிமூன்று குழுக்களுக்கிடையில் செய்தேன். இதிலும் எல்லாக் குழுக்களும் மிக சிறப்பாக கலந்துகொண்டு தங்கள் பார்த்த சிறிய பாலுட்டிகளை வண்ண படங்களாக வரைந்து அனைவரின் பாரட்டையும் பெற்றனர். குறிப்பாக மிக அழகான முயல், எலி, வௌவால்களை வரைந்து, வர்ணம் செய்து அசத்தியிருந்தனர். இந்த உயிரினங்களின் சூழல் நன்மையை சொல்லிவிட்டு சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் மூன்று குழுக்களுக்கு பரிசுகளை ஆசிரியை வழங்கினார்கள். கடைசியாக, அனைவரும் எழுந்து நின்று, உயிரினங்கள் பாதுகாப்பு பற்றி தொடர் உறுதிமொழி செய்துகொண்டோம். 

சில புரிதல்கள்:
1.பெருமபாலான மாணவர்கள் அவர்கள் வாளகத்தில் உள்ள பழந்தின்னி வௌவால் பற்றி கூறினார்கள். அதை அவர்கள் பத்திரமாக பாதுகாப்போம் என்றும் சொன்னார்கள்.
2. மாணவிகள் பேசும்போது 'இந்த சிறிய வௌவாலை' நம்ம friend ஆக ஏத்துக்குவோம் என்றாங்க.
3. ஒரு குட்டி பையன் மிக சாதாரணமாக "எல்லா உயிரினமும் இந்த காட்டுல இருந்தாதான் பாக்குறதுக்கு அழகா இருக்கும்" என்றான்.
4. மேலும் சிலர் பறவைகள், பூச்சிகள், அணில்கள் சூழ்ந்த இந்த காட்டில் வாழ்வதே சந்தோசமாக உள்ளதாக கூறி சென்றார்கள்.
5. வௌவால் இவ்வளவு நன்மை செய்கிறதா என்று ஆச்சர்யத்தோடு சொன்னாள் ஒரு சிறுமி.
6. இந்த வகுப்பு அவர்களுக்கு புரிந்துகொள்ள மிக சுலபமாக உள்ளதாகவும் கூறினார்கள்.
நான் பலவிசயங்களை இந்த கிராமத்து குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மிகக் குறிப்பாக கேள்வி கேட்கும் திறன். அதாவது அவர்கள் படித்த கிளாமிடோமொனஸ், பூஞ்சான்கள், அமீபா பற்றி இந்த வகுப்போடு இணைத்து பல கேள்விகளைக் கேட்டனர். இந்த வகுப்பு மிக சிறப்பாக முடிந்தது. அவர்களின் சூழல் அக்கறையும், அவர்களை சுற்றி உள்ள விலங்குகளின் மேல் உள்ள கவனமும், நிச்சயம் அவர்களின் அடிப்படை அறிவியல் ஞானத்தை வளர்க்கும். சரியான வழிகாட்டினால், அறிவியலில் மிக சிறப்பானதொரு வளர்ச்சியை இவர்களால் எட்ட முடியும்.
இந்த நிகழ்சிக்காக எனக்கு உதவிய என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு நன்றி. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த வகுப்பு மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

அன்புடன்  
பிரவின் குமார்



   



0 comments:

Post a Comment