About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday 3 December 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: IX
சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 
கடந்த மாதம் 4ம் தேதி அன்று சிறிய பாலுட்டிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள காணிக் குடியிருப்பு உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னுடன் என் நண்பன் சக்தி ராஜுவும் வந்திருந்தான்.
நானும் என் நண்பன் சக்தி ராஜுவும் அதி காலையிலே வீட்டிலிருந்து புறப்பட்டோம். செல்லும் வழியெல்லாம் மழை! மழையில் நனைந்தவாரே பாபநாசத்தை அடைந்தோம். அங்கு சிறிதுநேரம் நின்றுவிட்டு கிளம்பினோம். மீண்டும் மழை ஓயாமல் பெய்தது, வேறு வழியின்றி ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று மழையை வேடிக்கை பார்த்தோம். மழை சிறிது நின்றதும் கிளம்பி, பள்ளிக் கூடத்திற்கு சென்றோம். வகுப்பை துவங்குவதற்கு தேவையானவற்றை செய்துவிட்டு அமர்ந்தேன்.



எளிமையான அறிமுகத்துடன் நிகழ்ச்சியை துவக்கினேன். என்னை பற்றி சொல்லிவிட்டு, வந்திருந்த 40 மாணவர்களின் பெயர், அவர்கள் கடைசியாக பார்த்த விலங்கு, அவர்கள் பார்க்க ஆசைப்படுகிற விலங்கு போன்றவற்றை சொல்லச் சொன்னேன், பின்பு இன்றைய தினம் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள போகிறோம் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு மனிதனும் சுற்றுச்சூழலில் ஒரு அங்கம் என்ற உண்மையை கதை போல விளக்கினேன். 
பின்பு, அவர்கள் பார்க்கும் பெரிய பாலுட்டிகள் பெயரை சொல்லச் சொன்னேன். யானை, காட்டு மாடு, புலி என பட்டியல் நீண்டது. அவர்களிடம் சிறிய பாலுட்டிகளுக்கு சில உதாரணங்களை சொல்லச் சொன்னேன். எலி, காட்டு அணில், கீரி, முயல் என சிலவற்றை சொல்லி கைதட்டல்களைப் பெற்றனர்.



இந்த குழந்தைகளுக்கு சிறிய பாலுட்டிகள் பற்றி தற்போதைய செய்திகளை சொல்லும் முன்பு ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியை பள்ளிக்கு வெளியில் நடத்தினேன். இதன் மூலம் சிறிய பாலுட்டிகளைப் பற்றி அவர்கள் மனநிலையை தெரிந்து கொள்ளலாம் என நினைத்தேன்.
கேள்விகள் மிக எளிமையாகவே இருந்தது. இந்த நிகழ்வு எப்படி என்றால், நான் கேட்கும் கேள்விக்கான பதில் அவர்களுக்கு சந்தோசமாக இருந்தால் அவர்கள் சந்தோஷ முகமுடைய அட்டையின் கீழும்,
கேள்விக்கான விடை கோபமாக அல்லது வருத்தமாக இருந்தால் வாடிய முகமுடைய அட்டையின் கீழும், ஒருவேளை பதில் இரண்டுக்கும் மத்தியில் இருந்தால் மனித சாதாரண முகமுடைய அட்டையின் கீழும் நிற்க வேண்டும். விதிமுறை என்னவென்றால் நீங்கள் மற்றவரை பார்த்து செய்யக்கூடாது. உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை செய்ய வேண்டும்.




கேள்விகள் சில இதோ:
1. வௌவால் உங்க கிராமத்தில உள்ள மரத்தில இருக்கு! இத பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கு ?
2. வௌவால் ஒரு மணி நேரத்துக்கு 600-1000 பூச்சிகளை பிடிச்சி சாப்பிடுது. இத கேக்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கு?
3. யாரவது முயல் பிடிக்க கன்னி வைச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்?
4. இந்த காட்டுல உள்ள மரங்களோடும், விலங்கோடும் நீங்க இருக்கீங்க!!!!!! இது உங்களுக்கு எப்படி இருக்கு?
பல பேர் அங்கும் இங்கும் ஓடி, கடைசியில் நின்று பதில்களை சிறப்பாக சொன்னார்கள். 

* வௌவாலும் நம்மை போல ஒரு உயிர்தான் அதை துன்புறுத்தக் கூடாது. ஏன்னா அது ஐயோ பாவம்.

* நமக்கு வீடு இருக்கு. இந்த மரத்தை எல்லாம் வெட்டிவிட்டா இந்த வௌவாலுக்கு ஏது வீடு?

* இந்த மலைதான் நமக்கு தண்ணி குடுக்குது, இந்த மலை எனக்கு எப்போதும் சந்தோசத்தை குடுக்குது. 

* நான் இங்கு பாக்குற எல்லாமுமே எனக்கு ஜாலியா இருக்கு. 

என்று பல விதமாக அவர்கள் எண்ணங்களை மிகுந்த சந்தோசத்துடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நான் கண்கூடாக பார்த்தது என்னவென்றால், இந்த மாணவர்களில் பலபேர் இந்த காட்டை, ஆம் நம் காட்டை கடவுளாகவே எண்ணுகிறார்கள். சிறிய புத்துணர்வுக்கு பின்னர் அனைவர்க்கும் வௌவால் பற்றி பல தகவல்களை சொல்லி திரும்ப சொல்ல சொன்னேன். வௌவால் வீடியோ ஒன்றை காண்பித்தேன். 


சிறிய இடைவெளிக்கு பிறகு அனைவரையும் எட்டு குழுக்களாக பிரித்து "வௌவால் வண்ணம் செய்தல்" என்ற நிகழ்வை செய்தேன். அனைவரையும் இதில் ஆர்வமாக ஈடுபடச் செய்தேன்.





"பல கருப்பு வெள்ளைக் கோடுகள், இந்த குழந்தைகளின் கை விரல் பட்டு கலர் கலர் வௌவால்களாய், வகுப்பு முழுவதும் பறந்ததை கண்டு மெய்மறந்து போனேன்".





அனைத்து குழுக்களும் மிகுந்த ஆரவாரத்தில் மிக அட்டகாசமாக வௌவால்களுக்கு கலர் செய்திருந்தார்கள். பின்னர் குழுத் தலைவர் அவர்கள் வர்ணம் செய்த படங்கள் பற்றியும் அந்த விலங்கின் சூழல் முக்கியத்துவம் குறித்தும் சொன்னார்கள். நான் அவர்களுக்கு தெரியாத கருத்துக்களை சொன்னேன்.  





பின்பு, ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் வழங்கிய வௌவால் தகவல் பெட்டகத்தை குழுக்களுக்கு வழங்கி, மேலும் வௌவால் பற்றி பல தகவல்களைச் சொன்னேன்.
பின்னர் குழுத்தலைவர் நான் சொன்ன தகவல்களை அனைவர் முன்னும் சொல்லி கைத்தட்டல்களை பெற்றனர். மேலும் ஒருசில மாணவர்கள் இந்த தகவல் புத்தகம் எளிதில் புரிவதாக சொன்னார்கள். 



காட்டு எலிகளை பற்றி சில செய்திகளை சொன்னேன். 1). மகரந்த சேர்கையில் காட்டு எலிகள் 2). விதைகள் பரப்புவதில் காட்டு எலிகள் 3). மண் - சுவாச நண்பனாக காட்டு எலிகள் என குறிப்பாக சிலவற்றை பகிர்ந்தேன்.
பின்னர், முள்ளெலிகளைப் பற்றியும் சில செய்திகளைக் கூறினேன். பெரும்பாலும் இதை சிறிய முள்ளம் பன்றி என பரவலாக நினைப்பார்கள், எனவே முள்ளெலி படங்ககளை காண்பித்து கேட்டேன். இந்த வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டுமே முள்ளெலிகளை நேரில் பார்த்ததாக கூறினார்கள். 
இந்தியாவில் மூன்று வகை முள்ளெலிகள் உள்ளது. 
1. இந்திய நீள்காது முள்ளெலி 
2. இந்திய வெளிர் முள்ளெலி 
3. தென் இந்திய முள்ளெலி அல்லது மதராஸ் முள்ளெலி.
தென் இந்திய முள்ளெலி அல்லது மதராஸ் முள்ளெலி என அழைக்கப்படும் இந்த முள்ளெலிகள் இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காணமுடியாத முள்ளெலி என்பதையும், தமிழ் நாட்டில் இன்னும் உள்ளதென்றும் சொன்னேன். 
முயல், அலுங்கு, கீரி பற்றி சொல்ல நினைத்தேன். நேரம் இல்லாததால் சொல்ல முடியவில்லை.





பின்பு வௌவால் பொம்மையை பயன்படுத்தி, அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டோம். ஒரு சிறிய வீடியோவுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி சில கருத்துக்களை சொன்னார்கள். 

அதிகம் கவனிக்கப்படாத, ஆராய்ச்சி செய்யப்படாத பல சிறிய பாலுட்டிகள் பற்றியும், தினம் தினம் அந்த விலங்குகள் நமக்கு செய்யும் சூழல் நன்மைகளையும் அனைவர்க்கும் எடுத்து சொல்வது நம் கடமை. அதில் ஒரு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி இந்த பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக கோவை ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் பல வகையில் உதவிகளை செய்தது. 
சிறிய பாலுட்டிகளைப் பாதுகாக்கும் விதமாக ஜூ மற்றும் வைல்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தெற்கு ஆசிய நாடுகளில் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கதுஇந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. மிக முக்கியமாக இந்த குழந்தைகள் காடுகள் மேல் வைத்திருக்கும் அக்கறை, அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. வீடு செல்லும் வரை இவர்களை பற்றியே சக்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  

கொசுறு: 
இந்தியாவில் உள்ள 423 பாலுட்டிகளில், 101 எலி வகைகளும், 29 பூச்சி உண்ணும் மூஞ்சுறு வகைகளும், மூன்று வகை முள்ளெலிகலும் உள்ளன. பெரும்பாலும் இந்த சிறிய பாலுட்டிகள் பற்றி அதிகம் தகவல் தெரியாததால் நிறைய விலங்குகளுக்கு அழிநிலை பட்டியல் கணக்கிட முடிய வில்லை. மிக முக்கியமாக, உலக அளவில் கடந்த 500 வருடத்தில் அழிந்துபோன விலங்குகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் 50-52 விழுக்காடு எலிக் குடும்பங்களே உள்ளன.

கடைசியாக….
நம் இந்தியாவில் உள்ள பாலுட்டிகள் எவை, அவற்றில் எது அச்சுறுத்தலில், ஆபத்தில், அழிவின் விளிம்பில் உள்ளது போன்ற தகவல்களை இளைய தலைமுறையினரும், இளம் ஆராய்ச்சியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வது நம் கடமை அல்லவா! 

நம்முடைய சிறிய முயற்சியும் நிச்சயம் இந்த சிறிய விலங்குகளை ஏதோ ஒரு வகையில் அழிவில் இருந்து காப்பாற்றலாம். 

நன்றியுடன் 
பிரவின்  


தொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII.

நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி

கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/11/2013) அன்று தென்காசி ஆய்குடி அமர் சேவா சங்கத்திற்கு ஒரு நாள் 'நன்னீர் சூழலியல் விழிப்புணர்வு' நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நன்னீர் ஆதாரங்கள், தகவல்கள், பலவகைப்பட்ட உயிரினங்கள் பற்றி சொல்லவே சென்றிருந்தேன். முதலில் அமர் சேவா சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள திருமதி. சுமதி அவர்களை சந்தித்துவிட்டு வகுப்பிற்குள் சென்றேன். நிகழ்ச்சியை வகுப்பாசிரியை துவக்கி வைத்தார். 

நான் என்னை அறிமுகம் செய்துவிட்டு அவர்களின் பெயர், வகுப்பை கேட்டு தெரிந்து கொண்டேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நன்னீர் வழங்கும் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தாமிரபரணி பற்றியும், இங்குள்ள அணைகள் மற்றும் கிளை நதிகள் பற்றியும் சொன்னேன். பின்னர் அவர்கள் நன்னீரில் பார்த்த விலங்குகள், சிறு பூச்சிகள் பற்றி கேட்டு அறிந்தேன். அவர்களில் பலர் மிக நீண்ட வரிசையாக பட்டியலிட்டனர். தேங்கி உள்ள மற்றும் ஓடும் நன்னீர் பற்றி சொல்லிவிட்டு, மேற்குத்தொடர்ச்சிமலையையும், அவைகள் மனித சமுதாயத்திற்கு வழங்கி வரும் சேவைகளை பற்றியும், அவற்றின் அளப்பரிய, எண்ணிலடங்கா விலங்கு குழுக்களையும் பற்றி சொன்னேன்.
அவர்கள், இந்த மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்து மேற்குத்தொடர்ச்சிமலையின் வரைபட நிகழ்வை நடத்தினேன். இதில் அனைவரும் மிக ஆர்வமாக கலந்துகொண்டு படங்களை இணைத்தனர்.ஒவ்வொரு குழுவினரும் மேற்குத்தொடர்ச்சிமலை உள்ள மாநிலங்களை வகைபடுத்தி, அவற்றின் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 



பின்னர் மேற்குத்தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகும் முக்கிய ஆறுகள் கொண்ட வரைபடத்தை இணைத்தனர். இதில் ஆறுகளின் பெயர்களை எழுதினர். இதில் எல்லா குழுவினரும் மிக வேகமாக வரைபடத்தை இணைத்து கலந்து கொண்டனர்



நன்னீர் தேவை, பற்றாக்குறை பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லிவிட்டு உயிரினங்களின் வகைப்பாடு என்ற நிகழ்வை ஐந்து குழுக்களிடையில் செய்தேன். இதில் ஓவ்வொரு குழுக்களிடமும் பல தாவர, விலங்கு அட்டைகளை கொடுத்தேன். அதை அவர்கள் விரும்பிய படி வகைப்படுத்த சொன்னேன். சில உதாரணம் கொடுத்தேன்
1. நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை
2. தாவர உண்ணி, ஊன் உண்ணி மற்றும் அனைத்துண்ணி 
3. காட்டில் உள்ளவை, வீட்டில் உள்ளவை 
அவர்கள் அனைவரும் தத்தம் குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு, மிக சிறப்பாக உயிரினங்களை வகைப்படுத்தியிருந்தர்கள். கடைசியாக முதுகெலும்பு உள்ளவை மற்றும் முதுகெலும்பு அற்றவை என்ற முறையில் வகைப்படுத்த சொன்னேன்பின்னர் அனைத்து குழுக்களும் தங்கள் வகைப்படுத்தியிருந்த பட்டியலை சொல்லி கைதட்டல்களை பெற்றனர். நமது காட்டில் உள்ள பல வகைப்பட்ட அரிய தாவர, விலங்குகளை பற்றி சொல்ல அவர்களுக்கு அதிகம் தெரிந்த, பார்த்த நன்னீர் தாவரங்கள், மீன்கள், தட்டான்பூச்சிகள் மற்றும் நத்தைகள் பற்றி செய்திகளை வண்ண அட்டைகள் மூலமாக சொன்னேன்.
குறிப்பாக 1. நம் பகுதியில் அழிவில் உள்ள நன்னீர் தாவரங்கள் 2. ஏன் தண்ணீர் அவசியம் தட்டான்களின் இனப்பெருக்கத்திற்க்கு 3. மெல்லுடலிகள் எனப்படும் சிப்பிகள், நத்தைகள், மட்டிகள் எப்படி உண்கிறதுஏன் அழிவில் உள்ளது? அரிதாக காணமுடிகிறது? 4. எப்படி பூச்சிக்கொல்லிகள் அரிய வகை மீன் இனத்தை பூண்டோடு அற்று போக செய்கிறது என்று சொன்னேன்.
பின்னர் நான்கு குழுக்களுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் நன்னீர் மீன்கள் மற்றும் தட்டான்கள் கலர் படங்களை கொடுத்தேன். அனைவரும் இந்த படங்களை உற்று நோக்கி, அவர்கள் பகுதியில் பரவலாக காணக்கூடிய நன்னீர் மீன்கள் மற்றும் தட்டான் பூச்சிகளை சொன்னார்கள். 





பின்பு அனைவருக்கும் ஜூ அவுட்ரீச் அர்கனைசேஷன் வழங்கிய மேற்குத்தொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரியம் தகவல் பெட்டகம் வழங்கினேன். 



இதில் உள்ள "மேற்குத்தொடர்ச்சி மலை - நன்னீர் பாதுகாப்பு" என்ற எழுத்து உள்ள ராக்கியை தங்கள் அருகில் உள்ளவர்களின் கைகளில் கட்டிவிட்டார்கள். பின்னர் நன்னீர் சூழல் கையேட்டை திறக்க சொல்லி அதில் உள்ள மாசுபாடுகள் மற்றும் மேலாண்மை என்ற பகுதியை வாசிக்க சொன்னேன். 



அனைவரும் பின்பு அனைவருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலை நன்னீர் சூழலியம் "பாதுகாப்பது நம் கடமை" என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். கடைசியில் அழிவில் நம் பசுங்காடுகள் என்ற ஒரு வீடியோவை காண்பித்தேன். நிகழ்ச்சியை வகுப்பு ஆசிரியர் நிறைவு செய்து வைத்தார். 



இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது, மிக முக்கியமாக இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே வகுப்பில் புத்தகங்களுக்கிடையிலும், வளாகத்தில் மரங்களுகிடையிலும் சுற்றி வரும் இந்த அன்பு குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த நிகழ்ச்சி புதுமையாய் இருந்திருக்கும். நம் நன்னீர் சூழியலை பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததில் நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன்.  

சில பகிர்தல்கள்:
பங்கேற்ற பலருக்கு நன்னீர் தாவரத்தின் ஆறு வகைகள் எளிமையாக புரிந்ததாகவும், மீன் படம் போட்ட கலர் போஸ்டர் பயனுள்ளதாகவும், உயிரினங்களின் வகைப்பாடு நிகழ்வு புதிதாக இருந்ததாகவும் சொன்னார்கள்.
ஆய்குடி அமர் சேவா சங்கத்தில் உள்ள மதிப்பிற்குரிய சங்கர ராமன் அவர்களை சந்தித்து விட்டு, அக்ரஹாரதில் வசிக்கும் உயர்திரு ராமகிருஷ்ணன் அவர்களையும் பார்த்துவிட்டு மழைச்சாரலில், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். 
இந்த நிகழ்சிக்காக நன்னீர் சூழல் தகவல் பெட்டகத்தை வழங்கிய ஜூ அவுட்ரீச் அர்கனைசேஷன் மற்றும் என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்.

நன்றியுடன் 
பிரவின்  

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VII

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VII.
நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:
கடந்த 15/10/2013 அன்று, திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம் அடிவாரம்) அசிசி பேராலய வளாகத்தில் ஒரு நாள் நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக டேனியல் அவர்களுடன் சென்றிருந்தேன்.  இந்த நிகழ்ச்சியில் பேராலய பாதிரியார் மற்றும் மதிவாணன் (ATREE) கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.





மேற்கு தொடர்ச்சி மலையின் நன்னீர் ஆதாரங்கள்நன்னீர் உயிரினங்கள்அச்சுறுத்தலில் உள்ள நன்னீர் உயிரினங்கள் பற்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள்கிராம வனக் குழுக்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களுக்கு எடுத்துரைக்கவே சென்றிருந்தோம். பல வனக் குழுக்களில் இருந்து பல பெண்கள் ஆர்வமாக இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.


டேனியல் அவர்கள் நன்னீர் சூழலின் அவசியத்தையும், ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எளிமையாக கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளவிருக்கிறோம் என்பதை ரத்தினச் சுருக்கமாய் சொல்லிவிட்டு, வந்திருந்த கிராம வனக் குழுக்கழு மக்களிடம், அவர்களின் பெயர், குழுவின் பெயர், அவர்களின் தொழில் போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டோம். நமது பகுதியில் உள்ள முக்கியமான நன்னீர் ஆதாரங்கள், நன்னீர் உயிரினங்களை பற்றி டேனியல் அவர்கள் எடுத்துக் கூறினார்.

இந்த களக்காடு முண்டந்துறை மலையை ஒட்டி வாழும் இந்த மக்களில் பலர் இந்த மலையை பற்றியும், அங்கு உள்ள பலவகைப்பட்ட உயிரினங்களையும் பற்றி நிறைய தெரிய விரும்பியதாக கூறினார்கள். டேனியல் அவர்கள் நன்னீர் சூழலில் உள்ள அச்சுறுத்தலில் உள்ள, அழிவில் உள்ள சில வகை நன்னீர் உயிரினங்களை பற்றி கூறினார்கள். பின்னர் நான் நன்னீர் மேற்குத் தொடர்ச்சி மலையை பற்றியும், இந்த சிறப்பான மலையின் முக்கியத்துவத்தையும் சொல்லிவிட்டு, நான்கு வகை உயிர் குழுக்களான, நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் நன்னீர் தாவரங்கள் பற்றி கூறினேன். 



தாமிரபரணியின் கிளை நதிகள் பற்றியும் விளக்கப்பட்டது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்குத்தொடர்ச்சி மலை உள்ள மாநிலங்களுக்கான வரைபடமும், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் முக்கியமான ஆறுகள் வரைபடமும் (இணைக்கும்) செயல் முறையும் நிகழ்த்தப்பட்டது. இதில் அனைவரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர். 



பின்னர் வகைப்பாடு (Classification) என்ற செயல்பாட்டை இந்த குழுக்களுக்கிடையில் நடத்தினோம். இதில் தாவர உண்ணி, ஊன் உண்ணி, அனைத்துண்ணி, முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்புபற்றவை என்ற வகையில் மிக விரைவாக கொடுக்கப்பட்ட தாவர, விலங்கு படங்களை வகைப்படுத்தி இருந்தார்கள்.  



பின்னர் உணவு இடைவெளிக்கு பிறகு அனைவர்க்கும் நன்னீர் மீன்கள், நன்னீர் தட்டான்கள் உள்ள கலர் அட்டைகள் வழங்கப்பட்டது. அனைவரும் ஆர்வமாக அவர்கள் பகுதியில் பார்த்த மீன்களையும், தட்டான்களையும் பார்த்து கொண்டிருந்தனர். 
பின்பு அனைவருக்கும் மேற்குத்தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் பயிற்சிப் பெட்டகம் வழங்கப்பட்டது. இதை அனைவரும் மிக சிறப்பாக பயன்படுத்தி, செயல் முறையில் ஈடுபட்டனர். அனைவரும் நன்னீர் சூழலியம் பாதுகாப்பது நம் கடமை என்று உறுதிமொழி செய்து கொண்டனர். 



இந்த பகுதியில் நன்னீர் ஆதாரங்களையும், நன்னீர் உயிரினங்களையும் பாதுகாக்க இந்த மக்கள் உறுதிமொழி  எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அனைவரின் ஈடுபாட்டுடனும், உதவியுடனும் இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தது.