About

Monday 27 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 39


வனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா.

கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 






இது சீனாவின் தலைநகர் ‘பிஜிங்’ நகரில் நடைபெற்றது.  இதனை ‘ஐ எஸ் இசட் எஸ்’ எனப்படும் international society for zoological sciences எனும் சீன அமைப்பு எடுத்து நடத்தியது.  இது 11 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 17 நாடுகளாகச் சார்ந்த நூற்றுக் கணக்கான இளம் வனவிலங்கு ஆய்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பட்டயப்படிப்பு மணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 8 பேர் கலந்து கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த நிகழ்ச்சியில் புதிய வனவிலங்கு ஆராய்ச்சிக் கோட்பாடுகள், புதிய வழிமுறைகள், திட்டங்கள் , கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பங்கள், அடிப்படை தேவைகள் என ஒரு ஒருங்கிணைந்த வனவிலங்கு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு பயிற்சிப் பட்டறையாக இருந்தது.




எனது முதல் வெளிநாட்டுப் பிரயாணமாக இருந்த போதிலும், நான் இதில் முழுமையாக கலந்து கொண்டு பயனடைந்தேன்.


முதலில் Giant Panda எனப்படும் பெரிய ‘பாண்டா கரடி’ கள் சீனாவில் எங்கெங்கு உள்ளது, அவற்றின் எண்ணிக்கை வாழிடம், சிறப்பியல்பு, அழிவிற்கான காரணங்கள் என ‘வெய்’ சுருக்கமான கூறினார். மேலும் 50 வகை மூங்கில் மரங்களின் இலை, தண்டுகளை பாண்டா கரடிகள் விரும்பு உண்கிறது எனவும் கூறினார்  அப்படியே பல்வேறு கரடிகள் சில குறிப்பிட்ட இடங்களில் அதுவும் எண்ணிக்கை மிகவும் சிதலடைந்து, துண்டாக்கப்பட்டு அபாயத்தில உள்ளதாகவும் கூறினார். விஞ்ஞானி பூமென் வெய் - கடந்த 30 வருடங்களாக சீனாவின் “பாண்டா கரடி’களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறையைப் பற்றியம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.





பின்பு விலங்குகளின் நரம்பு மண்டலம் பற்றியும், சமூக செயல்பாடு பற்றியும் , DNA பாரிணாமங்கள் பற்றியும் சுவாராஸ்ய வகுப்புகள் இருந்தன.



பின்பு விலங்குகள் நகர்தல் - சூழ்நிலையியல் பற்றியும் உணவு உண்ணும் முறை பற்றியும் தனித்தனி வகுப்புகள் இருந்தன.  நான் எல்லா வகுப்புகளிலும்  கலந்து கொண்டு முழுமையாகப் பயனடைந்தேன்.  பின்பு rodentia எனப்படும் கொரித்துண்ணும் பிராணிகளின் வாழ்க்கை, புல்வெளி அழிப்பினால் இவற்றிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வகுப்புகள் இருந்தன.  பின்பு எங்களுக்கு ‘இலவசமாக’ சீன விலங்கு அருங்காட்சியகத்தை காண வாய்ப்பு அளிக்கப்பட்டது.  நான் அதிகமாக நேரத்தை இங்கு செலவிட்டேன்.  பறவை, பாலூட்டி, பட்டாம் பூச்சி என, பல வருட, பழைய காலத்து வினோத விலங்குகளை கண்டேன். நம்மூர் காகம், மயில், செம்பூத்து, கொண்டலாத்தி என பல பறவைகளும், கிங் பிஸர் வகை மீன் கொத்தகளும் கண்டேன். 







என்னை மிகவும் கவர்ந்த மிக அழகான அருங்காட்சியகம் அது. மேலும், பலவகை மான்கள், புலி, பனிக்கரடி, பாண்டா கரடி, குரங்குகள் போன்றவற்றைப் பார்த்தேன்.  எல்லாவற்றிலுமே ஒருவித நேர்த்தி, அழகு இருந்ததை காண முடிந்தது. செத்துப்போன விலங்குகளில் என்ன அழகு என்று கேட்கலாம். ஆனால் எனக்கு என்னவோ எல்லாமே அழகாய்த்தான் தெரிந்தது.  




மேலும் கண் கவர் பட்டாம் பூச்சிகள், பறவைகள், பெரிய வண்டு என பார்த்து பார்த்து லயித்துப் போனேன்.  சொல்லப் போனால் எனக்கு அந்த அருங்காட்சியகத்தை விட்டு வரவே மனமில்லை. 

வந்திருந்த அனைவரையும் 6 குழுக்களாகப் பிரித்தனர்.  நான் ஒரு குழுவின் தலைவரானேன். என் குழுவில் 3 மங்கோலியர்கள், 6 சீனர்கள், 2 பாகிஸ்தானியர்கள் இருந்தனர். அவர்களிடம் பழகி, அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், என்ன ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல்களைப் பெற்றுக் கொண்டேன்.  பின்பு அன்று இரவே அனைவரும் தங்களைப் பற்றியும், அவர்கள் ஆராய்ச்சிகள் பற்றியும் 10 நிமிடம் அனைவர் மத்தியிலும் எடுத்துக் கூறினோம்.    

நானும், தமிழக சிறிய பாலூட்டிகள் குறித்த எனது களப்பணி விவரங்களையும், சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொன்னேன்.


மறுநாள், எப்படி "அகொடிஸ்" வகைக் காட்டு எலிகள் மிகப் பெரிய தூரமான இடங்களுக்கு விதைகளை கொண்டு செல்கிறது என்று முனைவர் "பாட்ரிக் சான்சன்" விளக்கினார்.  இது என்னால் மறக்க முடியாத ஒரு இரவு.  மிக சுவாரஸ்யமாக இருந்தது அவரது ஆராய்ச்சி. மேலும் ஆய்வு முடிவுகள் ஆச்சர்யப்படுத்துவதாக இருந்தது.  பின்பு விலங்குகளின் எண்ணிக்கை, குழுவை கணக்கிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து முனைவர் சார்லஸ் கெரப்ஸ் விளக்கினார்.
தொடர்ந்து சீனாவைத் சேர்ந்த ஆசிரியர்கள் வகுப்பைத் தொடர்ந்தனர்.  கடைசி இரண்டு நாட்கள் கொஞ்சம் ‘மொக்கை’ யாகத்தான் சென்றது 




மற்றபடி எல்லாமே சிறப்பு "உணவையும் - குளிரையும்" தவிர்த்து, அதிகமான நேரத்தை நான் “பாலுட்டிகள் ஆய்வகத்தில்" கழித்தேன். அவர்களது ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள, தினமும் அவர்களை தேடிச் சென்றேன். சிறப்பாக கவனித்தார்கள், சொல்லி கொடுத்தார்கள். நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்கள். கடைசி நாளில் அங்குள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய மான் இனமான ‘Red Deer’ ஐ பார்த்து பரவசமடைந்தேன்.  





பின்பு கடைசி இரண்டு நாட்களில் 8 இடங்களை சுற்றிப் பார்த்தோம்.  சீனப் பெருஞ் சுவரைக் கண்டு வியந்தேன்.  டைமன் ஸ்குவார் மற்றும் பியர்ல் மார்க்கெட், சொர்க்க கோவில் என பல இடங்களுக்கு சென்றேhம்.  எனக்கு சீனா மிகவும் பிடித்திருந்தது.  பீஜிங் - தவிர்த்து மற்ற இடங்கிளல் வாகன நெரிசல், நச்சுப்  புகை சற்று குறைவுதான்.

எனக்கு புதிய நண்பர்கள் பலர் கிடைத்தனர். குறிப்பாக Jilong மற்றும் Yongbin.  இருவரின் அன்பில், நான் எதோ தமிழ் நண்பர்களிடம் இருப்பது போலத்தான் உணர்ந்தேன்.  அதுவும் அவர்கள் பேசும் சீன பாசை எனக்கு புரியாது,  நான் பேசும் அரை-குறை ஆங்கிலம் அவர்களுக்கு சுத்தமாக விளங்காது. இருந்தாலும் மெதுவாக  மெதுவாக பேசி நண்பர்களானோம்.  

இரண்டு ஆசிரியர்களை பார்த்தேன்.  இருவரும் மிகச் சிறப்பாக எனக்கு உதவி புரிந்தார்கள். அவர்கள் ஆராய்ச்சியைப் பற்றி விளக்கினார்கள். மேலும், சீனாவின் அரசு அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கவனித்தேன்.




கூட்டம் நடந்த விலங்கியல் துறை தவிர்த்து எங்களால் வேறு எந்த துறைக்கும் செல்ல அனுமதியில்லை. இருந்தாலும் மூன்று துறைகளுக்குள்ளும் சென்று அங்குள்ள பலவகை விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு வந்தோம்.
இப்படியாக எனது 10 நாட்கள் சீனாவில் கழிந்தது. 

பறப்பதையும் ,ஊர்வதையும் அதிகம் உண்ணும் சீனர்கள், சூப்  வகைகளை நன்றாக விரும்பி உண்கிறார்கள்.  எனக்குத்தான் சைவ உணவு சரியாகவே கிடைக்கவில்லை.

அப்புறம் ஏதோ கிடைத்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பழச் சாறு என சாப்பிட்டேன்.  ஒரு நாள் எனது சீன நண்பன் Jilong  என்னை நல்ல சைவ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாதமும், உருளைக்கிழங்கு பொரியலும் வாங்கிக் கொடுத்தான். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நான் தனியாகவே அங்கு சென்றேன். சாதமும் உருளைக் கிழங்கையும் பார்க்கத்தான் என்ன மிகழ்ச்சி.  உண்டேன் நிம்மதியாக ...

திரும்பவும் எனது ஆய்வக அறைக்கு வந்தேன். Jilong எனக்கு சீனக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் எனக்கு ஒரு பெரிய வாழ்த்து அட்டையை பரிசாக அளித்தான்.





அனைவரின் ஒத்துழைப்போடு என் சீனப் பயணம் சிறப்பாக முடிந்தது.  எனது சிறப்பு நன்றிகள் சின அரசின் அறிவியல் அகாடமிக்கு.  ஏனெனில் அவர்களின் முழுமையான “ஸ்காலர்சிப்”
மூலமாகத்தான் என்னால் சென்று வர முடிந்தது. எனது அலுவலகத்திற்கும் என் நன்றிகள்.
கற்றலைத் தாண்டி பல விசயங்களை காட்டிய இடம் சீனா.  எனது ஆராய்ச்சியை உலகளாவிய அளவிற்கு எடுத்துச் செல்லவும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளை நான் கண்டு கொள்ளவும் இந்த சீனப்பயணம் எனக்கு உதவியது. 


இப்படிக்கு,
பிரவின்குமார்,
கன்னியாகுமரி. 


0 comments:

Post a Comment