About

Wednesday, 5 November 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 33


வன விலங்கு வார விழா நிகழ்வு 2
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம்


வன விலங்கு வார விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிகழ்ச்சி ஞாயிறு (5.10.2014) மற்றும் திங்கள் (6.10.2014) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களும் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுகாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.
முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்தேன். வெறுமனே வன விலங்கு கருத்துக்களை சொல்லாமல், நமது காடுகள், வளங்கள், தண்ணீர், வன விலங்கு குறித்த பல விளக்க படங்கள், அட்டைகளை காட்சிக்கு வைத்திருந்தேன். பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆர்வமாக பார்த்தனர். நம்மை சுற்றி உள்ள காட்டு விலங்குகள் குறித்தும் நான் விளக்கமாக கூறினேன். காடுகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதின் அவசியத்தை சொன்னேன். இன்று ஞாயிறு என்பதால் பூங்காவே, மக்கள் கூட்டத்தில் மூழ்கி இருந்தது.  பூங்கா ஊழியர்கள் கூட…

பூங்காவில் பணி புரியும் ஊழியர்களும் இந்த கண்காட்சியை வந்து பார்த்து சென்றனர். மாலை ஐந்து மணி வரை இப்படியே குழுக் குழுவாக வரும் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மிக எளிய தமிழில் வன விலங்கு பாதுகாப்பு குறித்த கருத்துக்களை எடுத்துச் சொன்னேன். அவர்களை சுற்றி இவ்வளவு உயிரிகள் உள்ளதா என பலரும் ஆச்சர்யத்தில் சென்றதை பார்க்க முடிந்தது. இதே போல் இரண்டாவது நாள் கூட பூங்காவில் கூட்டம் அதிகம்தான்.  
நால்வர்

இன்று காலையில் தொடங்கி மாலை நான்கு மணி வரை பொது மக்களுடன் கழித்தேன். இன்றைய தின ஆரம்பத்தில், என்னுடன் நான்கு குழந்தைகள் வந்து ஒட்டிக் கொண்டனர். அவர்கள் பக்கத்துக்கு கிராம பள்ளி செல்லும் சிறார். காட்டு முயல், குரங்கு, ஆமைகள், காட்டு மாடு, அலுங்கு குறித்த தகவலுடன் வௌவால் குறித்த தகவல்களை அவர்களுக்கு சொன்னேன். குழந்தைகளுகாகவே நான் கொண்டுவந்திருந்த வண்ண வண்ண முக முடிகளை கொடுத்தேன். வன விலங்குகள், பூங்காவில் கடைபிடிக்க வேண்டிய சில விசயங்களை குறித்த சில வாசகங்களை சொல்லிக் கொடுத்தேன். அட ..இந்த மாணவர்கள் பரப்புரைக்கு தயார். அவர்கள் முகத்தில் முகமுடி, கையில் பதாகை, மணிக்கட்டில் ஒரு அட்டை. அவர்களை அப்படியே பூங்காவை சுற்றி வர சொன்னேன். சொல்லிக் கொடுத்த வாசகங்களை சொன்னபடியே பூங்காவை வலம்வந்தனர். அனைவரையும் கவர்ந்தனர். குறிப்பாக மான் கூண்டு, குரங்கு கூண்டு, நட்ச்சத்திர ஆமை உள்ள இடம், பறவைகள் உள்ள கூண்டின் அருகில் சென்று "வன விலங்குகளுக்கு உணவளிக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு வந்தனர்.                     நான் இவர்களுடன் செல்ல முடியவில்லை. ஆனால், நிறைய பார்வையாளர்கள் இவர்களிடம் பேசியதாக சொன்னார்கள்.  இந்த மாணவ மணிகள் வந்தது.. எனக்கு உதவியது.. மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.அவர்களின் பெயர், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண்ணை எழுதி வாங்கிக் கொண்டேன். அப்படியே எனது விலாசத்தையும் கொடுத்தேன். மேலும் இந்த நால்வருக்கும் (மனோஜ் குமார், ரசிகப் பிரியா, லீனா தமிழ்வாணன் மற்றும் பரத் ராஜ்) வன விலங்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்து, வாழ்த்தி, அன்போடு வழியனுப்பி வைத்தேன். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதை கண்டு கொண்டேன்.        

சுவாரசிய சந்திப்பு 

இவர்களின் சந்திப்பு போலில்லாமல், அமைதியாகத்தான் நடந்தது திரு.சௌந்தர் ராஜன் அவர்களின் சந்திப்பு. சுமார் அரை மணி நேரம் ஆகியும் இவரும், இவர் நண்பரும் இந்த கண்காட்சி இடத்தை விட்டு நகர்ந்தபாடில்லை .. யாருமே என் பக்கம் வரவில்லை என்றாலும், நான் எதாவது செய்து பார்வையாளர்களை என் பக்கம் ஈர்த்து விடுவேன். அப்படி இருக்க ..இப்பொது இருவர் என்னருகே ..விடுவேனா? சிறிய ஊன் உண்ணிகள் குறித்தும், பாருகள் எப்படி குறைந்து போனது என்றும் சொன்னேன். அப்படியே ராட்சத சிலந்தி நமது காடுகளில் உள்ளது என்றும் சொன்னேன். அவர்கள் சில தகவல்களை சொல்லிவிட்டு சென்றனர்.  குதூகல ஜனங்கள் 

இன்று ரமலான் என்பதால் முகமதியர்கள் கூட்டத்தை பூங்காவில் எங்கும் காண முடிந்தது. நான் ரொம்ப "பிஸி" என்று படு வேகமாக, போன் பேசிய படியே பீறிட்டு நடை போட்ட அசட்டு முகங்களையும் காண முடிந்தது.    

சின்ன சின்ன குட்டீஸ் இங்கு வந்து "கடலாமையின் கதை" புத்தகத்தை பார்த்து, படித்து விட்டு சென்றதை பார்த்தேன். சில பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து "பாரு பாப்பா" நீ உன்னோட புக்ஸ்ல படிச்சிருக்கல..Amphibians ..நியாபகம் வருதா? தண்ணீர்லயும் வாழும், நிலத்திலயும் வாழும்..என்ன புரியுதா? என கேட்டு ஆர்வத்தை தூண்டியதையும் கண்டேன். 

இது போட்டோ கடை இல்லை

சும்மா கை கட்டி நின்ற என்னை ஒருவர் ..சார். நீங்க போட்டோகிராபரா? கொஞ்சம் எங்க ரெண்டு பேரையும் வச்சு ஒரு போட்டோ எடுத்து கொடுங்கள் என கேட்டதும், எனக்கு முதலில் கொஞ்சம் கோபமாக இருந்தாலும், பின்பு மெதுவாக விளக்கினேன். அண்ணா. இது வன விலங்கு விழிப்புணர்வு நடக்கும் இடம். இது போட்டோ கடை இல்லை, என சொன்னேன். 

சற்று நேரத்திலே மற்றுமொருவர் "தம்பி இங்க இருக்குறதெல்லாம் எதுக்கு ? நீங்க பைக்குக்கு ஸ்டிக்கர் ஓட்டுவீங்களா ? என அவர் கேட்க ..  இல்லை என சொல்லி நான் நொந்து போய் ஐயோ.. சாமி ..ஆள விடு.. என வெளியில் சென்று அன்னாசி பழம் சாபிட்டிட்டு விட்டு வந்தேன்.     
  
இந்த பூங்கா ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் இதுதான் வன விலங்கு குறித்த மூன்றாவது  நிகழ்ச்சியாக இருக்கும் என் நான் நினைக்கிறன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் பொதுவாகவே, வெகு ஜன மக்களுக்கு காட்டுயிர் குறித்த கரிசனம் அதிகம் உள்ளதையும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வனத் துறையும் இணைந்து செயல்பட்டு வனத்தை பாதுகாக்க பல வித செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

நான் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சி ஓரளவிற்கு முடித்து விட்டேன். பார்ப்போம்..வரும் மாதங்களில் இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை இங்கு நடத்த முடியுமா என்று..

நான் சற்றும் எதிர் பார்க்காமல் இருந்த சமயத்தில், என்னை காண வந்த அன்பான "காட்டு மாடு" என்னை வசீகரித்தது.     நன்றி
இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய திரு.வி. கணேசன் இ.வ.ப, முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் திரு.தனபாலன், மாவட்ட வன அலுவலர், சேலம். மற்றும் குரும்பப்பட்டி பூங்கா வன சரகர், மற்றும் ஊழியர்களுக்கும் என் நன்றிகள். நிகழ்ச்சிக்காக பல வித தகவல்களையும், அட்டைகளையும் வழங்கிய, உதவி நல்கிய என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். 

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 
அலைபேசி: 9600212487
               


Reactions:

0 comments:

Post a Comment