About

Tuesday, 3 December 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: IX
சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 
கடந்த மாதம் 4ம் தேதி அன்று சிறிய பாலுட்டிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள காணிக் குடியிருப்பு உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னுடன் என் நண்பன் சக்தி ராஜுவும் வந்திருந்தான்.
நானும் என் நண்பன் சக்தி ராஜுவும் அதி காலையிலே வீட்டிலிருந்து புறப்பட்டோம். செல்லும் வழியெல்லாம் மழை! மழையில் நனைந்தவாரே பாபநாசத்தை அடைந்தோம். அங்கு சிறிதுநேரம் நின்றுவிட்டு கிளம்பினோம். மீண்டும் மழை ஓயாமல் பெய்தது, வேறு வழியின்றி ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று மழையை வேடிக்கை பார்த்தோம். மழை சிறிது நின்றதும் கிளம்பி, பள்ளிக் கூடத்திற்கு சென்றோம். வகுப்பை துவங்குவதற்கு தேவையானவற்றை செய்துவிட்டு அமர்ந்தேன்.எளிமையான அறிமுகத்துடன் நிகழ்ச்சியை துவக்கினேன். என்னை பற்றி சொல்லிவிட்டு, வந்திருந்த 40 மாணவர்களின் பெயர், அவர்கள் கடைசியாக பார்த்த விலங்கு, அவர்கள் பார்க்க ஆசைப்படுகிற விலங்கு போன்றவற்றை சொல்லச் சொன்னேன், பின்பு இன்றைய தினம் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள போகிறோம் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு மனிதனும் சுற்றுச்சூழலில் ஒரு அங்கம் என்ற உண்மையை கதை போல விளக்கினேன். 
பின்பு, அவர்கள் பார்க்கும் பெரிய பாலுட்டிகள் பெயரை சொல்லச் சொன்னேன். யானை, காட்டு மாடு, புலி என பட்டியல் நீண்டது. அவர்களிடம் சிறிய பாலுட்டிகளுக்கு சில உதாரணங்களை சொல்லச் சொன்னேன். எலி, காட்டு அணில், கீரி, முயல் என சிலவற்றை சொல்லி கைதட்டல்களைப் பெற்றனர்.இந்த குழந்தைகளுக்கு சிறிய பாலுட்டிகள் பற்றி தற்போதைய செய்திகளை சொல்லும் முன்பு ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியை பள்ளிக்கு வெளியில் நடத்தினேன். இதன் மூலம் சிறிய பாலுட்டிகளைப் பற்றி அவர்கள் மனநிலையை தெரிந்து கொள்ளலாம் என நினைத்தேன்.
கேள்விகள் மிக எளிமையாகவே இருந்தது. இந்த நிகழ்வு எப்படி என்றால், நான் கேட்கும் கேள்விக்கான பதில் அவர்களுக்கு சந்தோசமாக இருந்தால் அவர்கள் சந்தோஷ முகமுடைய அட்டையின் கீழும்,
கேள்விக்கான விடை கோபமாக அல்லது வருத்தமாக இருந்தால் வாடிய முகமுடைய அட்டையின் கீழும், ஒருவேளை பதில் இரண்டுக்கும் மத்தியில் இருந்தால் மனித சாதாரண முகமுடைய அட்டையின் கீழும் நிற்க வேண்டும். விதிமுறை என்னவென்றால் நீங்கள் மற்றவரை பார்த்து செய்யக்கூடாது. உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை செய்ய வேண்டும்.
கேள்விகள் சில இதோ:
1. வௌவால் உங்க கிராமத்தில உள்ள மரத்தில இருக்கு! இத பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கு ?
2. வௌவால் ஒரு மணி நேரத்துக்கு 600-1000 பூச்சிகளை பிடிச்சி சாப்பிடுது. இத கேக்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கு?
3. யாரவது முயல் பிடிக்க கன்னி வைச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்?
4. இந்த காட்டுல உள்ள மரங்களோடும், விலங்கோடும் நீங்க இருக்கீங்க!!!!!! இது உங்களுக்கு எப்படி இருக்கு?
பல பேர் அங்கும் இங்கும் ஓடி, கடைசியில் நின்று பதில்களை சிறப்பாக சொன்னார்கள். 

* வௌவாலும் நம்மை போல ஒரு உயிர்தான் அதை துன்புறுத்தக் கூடாது. ஏன்னா அது ஐயோ பாவம்.

* நமக்கு வீடு இருக்கு. இந்த மரத்தை எல்லாம் வெட்டிவிட்டா இந்த வௌவாலுக்கு ஏது வீடு?

* இந்த மலைதான் நமக்கு தண்ணி குடுக்குது, இந்த மலை எனக்கு எப்போதும் சந்தோசத்தை குடுக்குது. 

* நான் இங்கு பாக்குற எல்லாமுமே எனக்கு ஜாலியா இருக்கு. 

என்று பல விதமாக அவர்கள் எண்ணங்களை மிகுந்த சந்தோசத்துடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நான் கண்கூடாக பார்த்தது என்னவென்றால், இந்த மாணவர்களில் பலபேர் இந்த காட்டை, ஆம் நம் காட்டை கடவுளாகவே எண்ணுகிறார்கள். சிறிய புத்துணர்வுக்கு பின்னர் அனைவர்க்கும் வௌவால் பற்றி பல தகவல்களை சொல்லி திரும்ப சொல்ல சொன்னேன். வௌவால் வீடியோ ஒன்றை காண்பித்தேன். 


சிறிய இடைவெளிக்கு பிறகு அனைவரையும் எட்டு குழுக்களாக பிரித்து "வௌவால் வண்ணம் செய்தல்" என்ற நிகழ்வை செய்தேன். அனைவரையும் இதில் ஆர்வமாக ஈடுபடச் செய்தேன்.

"பல கருப்பு வெள்ளைக் கோடுகள், இந்த குழந்தைகளின் கை விரல் பட்டு கலர் கலர் வௌவால்களாய், வகுப்பு முழுவதும் பறந்ததை கண்டு மெய்மறந்து போனேன்".

அனைத்து குழுக்களும் மிகுந்த ஆரவாரத்தில் மிக அட்டகாசமாக வௌவால்களுக்கு கலர் செய்திருந்தார்கள். பின்னர் குழுத் தலைவர் அவர்கள் வர்ணம் செய்த படங்கள் பற்றியும் அந்த விலங்கின் சூழல் முக்கியத்துவம் குறித்தும் சொன்னார்கள். நான் அவர்களுக்கு தெரியாத கருத்துக்களை சொன்னேன்.  

பின்பு, ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் வழங்கிய வௌவால் தகவல் பெட்டகத்தை குழுக்களுக்கு வழங்கி, மேலும் வௌவால் பற்றி பல தகவல்களைச் சொன்னேன்.
பின்னர் குழுத்தலைவர் நான் சொன்ன தகவல்களை அனைவர் முன்னும் சொல்லி கைத்தட்டல்களை பெற்றனர். மேலும் ஒருசில மாணவர்கள் இந்த தகவல் புத்தகம் எளிதில் புரிவதாக சொன்னார்கள். காட்டு எலிகளை பற்றி சில செய்திகளை சொன்னேன். 1). மகரந்த சேர்கையில் காட்டு எலிகள் 2). விதைகள் பரப்புவதில் காட்டு எலிகள் 3). மண் - சுவாச நண்பனாக காட்டு எலிகள் என குறிப்பாக சிலவற்றை பகிர்ந்தேன்.
பின்னர், முள்ளெலிகளைப் பற்றியும் சில செய்திகளைக் கூறினேன். பெரும்பாலும் இதை சிறிய முள்ளம் பன்றி என பரவலாக நினைப்பார்கள், எனவே முள்ளெலி படங்ககளை காண்பித்து கேட்டேன். இந்த வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டுமே முள்ளெலிகளை நேரில் பார்த்ததாக கூறினார்கள். 
இந்தியாவில் மூன்று வகை முள்ளெலிகள் உள்ளது. 
1. இந்திய நீள்காது முள்ளெலி 
2. இந்திய வெளிர் முள்ளெலி 
3. தென் இந்திய முள்ளெலி அல்லது மதராஸ் முள்ளெலி.
தென் இந்திய முள்ளெலி அல்லது மதராஸ் முள்ளெலி என அழைக்கப்படும் இந்த முள்ளெலிகள் இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காணமுடியாத முள்ளெலி என்பதையும், தமிழ் நாட்டில் இன்னும் உள்ளதென்றும் சொன்னேன். 
முயல், அலுங்கு, கீரி பற்றி சொல்ல நினைத்தேன். நேரம் இல்லாததால் சொல்ல முடியவில்லை.

பின்பு வௌவால் பொம்மையை பயன்படுத்தி, அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டோம். ஒரு சிறிய வீடியோவுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி சில கருத்துக்களை சொன்னார்கள். 

அதிகம் கவனிக்கப்படாத, ஆராய்ச்சி செய்யப்படாத பல சிறிய பாலுட்டிகள் பற்றியும், தினம் தினம் அந்த விலங்குகள் நமக்கு செய்யும் சூழல் நன்மைகளையும் அனைவர்க்கும் எடுத்து சொல்வது நம் கடமை. அதில் ஒரு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி இந்த பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக கோவை ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் பல வகையில் உதவிகளை செய்தது. 
சிறிய பாலுட்டிகளைப் பாதுகாக்கும் விதமாக ஜூ மற்றும் வைல்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தெற்கு ஆசிய நாடுகளில் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கதுஇந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. மிக முக்கியமாக இந்த குழந்தைகள் காடுகள் மேல் வைத்திருக்கும் அக்கறை, அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. வீடு செல்லும் வரை இவர்களை பற்றியே சக்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  

கொசுறு: 
இந்தியாவில் உள்ள 423 பாலுட்டிகளில், 101 எலி வகைகளும், 29 பூச்சி உண்ணும் மூஞ்சுறு வகைகளும், மூன்று வகை முள்ளெலிகலும் உள்ளன. பெரும்பாலும் இந்த சிறிய பாலுட்டிகள் பற்றி அதிகம் தகவல் தெரியாததால் நிறைய விலங்குகளுக்கு அழிநிலை பட்டியல் கணக்கிட முடிய வில்லை. மிக முக்கியமாக, உலக அளவில் கடந்த 500 வருடத்தில் அழிந்துபோன விலங்குகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் 50-52 விழுக்காடு எலிக் குடும்பங்களே உள்ளன.

கடைசியாக….
நம் இந்தியாவில் உள்ள பாலுட்டிகள் எவை, அவற்றில் எது அச்சுறுத்தலில், ஆபத்தில், அழிவின் விளிம்பில் உள்ளது போன்ற தகவல்களை இளைய தலைமுறையினரும், இளம் ஆராய்ச்சியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வது நம் கடமை அல்லவா! 

நம்முடைய சிறிய முயற்சியும் நிச்சயம் இந்த சிறிய விலங்குகளை ஏதோ ஒரு வகையில் அழிவில் இருந்து காப்பாற்றலாம். 

நன்றியுடன் 
பிரவின்  


Reactions:

0 comments:

Post a Comment