About

Tuesday 3 December 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VII

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VII.
நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:
கடந்த 15/10/2013 அன்று, திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம் அடிவாரம்) அசிசி பேராலய வளாகத்தில் ஒரு நாள் நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக டேனியல் அவர்களுடன் சென்றிருந்தேன்.  இந்த நிகழ்ச்சியில் பேராலய பாதிரியார் மற்றும் மதிவாணன் (ATREE) கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.





மேற்கு தொடர்ச்சி மலையின் நன்னீர் ஆதாரங்கள்நன்னீர் உயிரினங்கள்அச்சுறுத்தலில் உள்ள நன்னீர் உயிரினங்கள் பற்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள்கிராம வனக் குழுக்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களுக்கு எடுத்துரைக்கவே சென்றிருந்தோம். பல வனக் குழுக்களில் இருந்து பல பெண்கள் ஆர்வமாக இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.


டேனியல் அவர்கள் நன்னீர் சூழலின் அவசியத்தையும், ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எளிமையாக கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளவிருக்கிறோம் என்பதை ரத்தினச் சுருக்கமாய் சொல்லிவிட்டு, வந்திருந்த கிராம வனக் குழுக்கழு மக்களிடம், அவர்களின் பெயர், குழுவின் பெயர், அவர்களின் தொழில் போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டோம். நமது பகுதியில் உள்ள முக்கியமான நன்னீர் ஆதாரங்கள், நன்னீர் உயிரினங்களை பற்றி டேனியல் அவர்கள் எடுத்துக் கூறினார்.

இந்த களக்காடு முண்டந்துறை மலையை ஒட்டி வாழும் இந்த மக்களில் பலர் இந்த மலையை பற்றியும், அங்கு உள்ள பலவகைப்பட்ட உயிரினங்களையும் பற்றி நிறைய தெரிய விரும்பியதாக கூறினார்கள். டேனியல் அவர்கள் நன்னீர் சூழலில் உள்ள அச்சுறுத்தலில் உள்ள, அழிவில் உள்ள சில வகை நன்னீர் உயிரினங்களை பற்றி கூறினார்கள். பின்னர் நான் நன்னீர் மேற்குத் தொடர்ச்சி மலையை பற்றியும், இந்த சிறப்பான மலையின் முக்கியத்துவத்தையும் சொல்லிவிட்டு, நான்கு வகை உயிர் குழுக்களான, நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் நன்னீர் தாவரங்கள் பற்றி கூறினேன். 



தாமிரபரணியின் கிளை நதிகள் பற்றியும் விளக்கப்பட்டது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்குத்தொடர்ச்சி மலை உள்ள மாநிலங்களுக்கான வரைபடமும், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் முக்கியமான ஆறுகள் வரைபடமும் (இணைக்கும்) செயல் முறையும் நிகழ்த்தப்பட்டது. இதில் அனைவரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர். 



பின்னர் வகைப்பாடு (Classification) என்ற செயல்பாட்டை இந்த குழுக்களுக்கிடையில் நடத்தினோம். இதில் தாவர உண்ணி, ஊன் உண்ணி, அனைத்துண்ணி, முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்புபற்றவை என்ற வகையில் மிக விரைவாக கொடுக்கப்பட்ட தாவர, விலங்கு படங்களை வகைப்படுத்தி இருந்தார்கள்.  



பின்னர் உணவு இடைவெளிக்கு பிறகு அனைவர்க்கும் நன்னீர் மீன்கள், நன்னீர் தட்டான்கள் உள்ள கலர் அட்டைகள் வழங்கப்பட்டது. அனைவரும் ஆர்வமாக அவர்கள் பகுதியில் பார்த்த மீன்களையும், தட்டான்களையும் பார்த்து கொண்டிருந்தனர். 
பின்பு அனைவருக்கும் மேற்குத்தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் பயிற்சிப் பெட்டகம் வழங்கப்பட்டது. இதை அனைவரும் மிக சிறப்பாக பயன்படுத்தி, செயல் முறையில் ஈடுபட்டனர். அனைவரும் நன்னீர் சூழலியம் பாதுகாப்பது நம் கடமை என்று உறுதிமொழி செய்து கொண்டனர். 



இந்த பகுதியில் நன்னீர் ஆதாரங்களையும், நன்னீர் உயிரினங்களையும் பாதுகாக்க இந்த மக்கள் உறுதிமொழி  எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அனைவரின் ஈடுபாட்டுடனும், உதவியுடனும் இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தது. 

0 comments:

Post a Comment