About

Saturday 19 April 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 20

உலக வன நாள் நிகழ்வு: சென்னிமலை, ஈரோடு 

சேலம் வன கோட்ட உலக வன நாள் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு பேருந்தில் சென்னிமலை கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு சென்றிருந்தேன். இந்த பள்ளி மாணவர்களுக்கு  வனங்களையும், வன விலங்குகளையும், தாவரங்களையும் பற்றி சொல்லவும், கலந்துரையாடவும் சென்றிருந்தேன். சுற்று வட்டாரதிலுள்ள நான்கு பள்ளியில் இருந்து சுமார் 60 மாணவ மாணவியர் இந்த பள்ளிக்கு உலக வன நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். தோழர். சங்கர் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் மாணவ மாணவியர்களுக்கு வணக்கத்தை சொல்லிவிட்டு, அவர்கள் பெயர், வகுப்பு, பிடித்த காடு மற்றும் அவர்கள் பார்க்க ஆசைப்படும் விலங்கு போன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டேன்.       



முதலில் "இயற்கை அன்னை" வீடியோவை காட்டினேன்.  அவர்களுக்கு அருகிலுள்ள மலைகளை பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். சென்னி மலை, சிவன் மலை என பெயர் நீண்டது. . . அப்படியே அவர்கள் அடிக்கடி பார்க்கும் விலங்குகளையும் கேட்டு தெரிந்து கொண்டேன். காடுகள் மற்றும் வன விலங்குகள் மனிதனுக்கு அளிக்கும் பலவித நன்மைகளையும் எடுத்து சொன்னேன். 



அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்து, காடுகள் வகைகள் மற்றும் விலங்குகள் வகைகள் பற்றி சொன்னேன். குழுத்தலைவர்கள் இந்த தகவலை அனைவர் முன்னும் வந்து பகிர்ந்து கொண்டனர். கைதட்டல்களை பெற்றனர். கடைசியாக ஒரு பாடலுடனும், வன பாதுகாப்பு உறுதி மொழியுடனும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். 




இந்த பள்ளியில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இங்குள்ள பலவகை பறவைகள், அவர்களை சுற்றி உள்ள விலங்குகள் பற்றிய தெளிவு உள்ளதை கண்டேன். ஒரு மாணவன் என்னிடம் கேட்டான். சார் ..ஸ்விப்ட் பறவை எதுக்கு சார் இவ்ளோ வேகமா பறக்குது. இன்னொருவன், சார் இந்த கொண்டலத்தி பறவை எப்போதுமே இப்படித்தான் நிக்குமா சார். அப்படியே ..எல்லாரும் என்னை சூழ்ந்து கொண்டு அடுத்த முறை வரும் போது கொண்டலத்தி புத்தகம் கொண்டு வாங்க..கடல் ஆமை வீடியோ காண்பிங்கவன விலங்கு CD கொண்டு வாங்க..சிட்டு வௌவால்பற்றி புத்தகம் கொண்டு வாங்க ….  என்று என்னை சற்றே உரிமையுடன் கேட்டார்கள். 




இந்த கிராமத்து குழந்தைகளிடம் உள்ள குதூகலமும், சூழல் கரிசனமும், உயிரினங்களிடத்தில் காட்டும் அன்பும், கேள்வி கேட்கும் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

பள்ளித் தலைமையாசிரியர் எனக்கு "விண்மீன்கள்" என்ற ஒரு தமிழ் புத்தகத்தை பரிசாக வழங்கினார்கள்.   

இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் சங்கர் மற்றும் கார்த்திக் இருவருக்கும் என் நன்றி. இந்த நிகழ்ச்சிக்காக உதவிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அலுவலகதிற்கும் என் நன்றிகள் ……..

மலைகள் மற்றும் காடுகள் குறித்த ஆசை, வியப்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்று அத்தனையுமே இந்த மழலைகளின் வழியாக மானுடம் செழிக்க பெருக வேண்டும் ………

அன்புடன் 

பிரவின், கோயம்புத்தூர்   

0 comments:

Post a Comment