About

Monday 21 April 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 21

வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 
மற்றும் 
புகைப்பட கண்காட்சி - நானல் குளம் 

இந்த ஏப்ரல் 7ம் தேதி அன்று வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்டதில் உள்ள ஆழ்வார்க்குறிச்சிக்கு அருகிலுள்ள நானல் குளம் என்ற கிராமத்தில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியை ஏட்ரீ - அகஸ்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கைவள பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பதிமூன்று குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திரு.மதிவாணன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். முதலில் எப்போதும் போல என்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டு அவர்களை பற்றி கேட்டேன். அவர்களுக்கு பிடித்த விலங்கு, கடைசியாக பார்த்த விலங்கு, அவர்களின் பெயர் மற்றும் வகுப்பு போன்றவற்றை கேட்டேன். பின்பு வகுப்பறைக்கு வெளியில் attitude assessment என்ற ஒரு நிகழ்வை நடத்தினேன். இதில் காடுகள், விலங்குகள் சார்ந்த கேள்விகளை கேட்டேன், அவர்கள் தரும் பதிலை பொறுத்து அவர்களின் மன நிலையை புரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த ஒரு செயல்பாட்டை வைத்திருந்தேன்.  





பின்பு காடுகள் குறித்தும், உணவு சங்கிலி குறித்தும், பல வகை உயிரினங்கள் குறித்தும் சொன்னேன். அழிந்துவிட்ட விலங்குகளுக்கு சில உதாரணங்களை கேட்டேன். பலரும் டைனோசர் என்று மட்டுமே பதில் சொன்னார்கள். பின்பு அவர்களுக்கு, டூ டூ (DO DO) பறவை பற்றிய ஒரு சிறிய வீடியோ வை காட்டிவிட்டு டூ டூ பறவை எப்படி மொரீசியெஸ் தீவில் இருந்து அளிக்கப்பட்டது என்றும், வேட்டை எப்படி ஒரு பறவையை இப்படி அளித்தது என்றும் சொன்னேன். இந்த பறவை அழிந்ததால், விதை பரவலுக்கும், முளைப்பதற்கும் இந்த பறவையை நம்பியே இருந்த "கல்வரியா" மரமும் எப்படி அழிந்தது என்று சொன்னேன். இந்த பறவையின் எலும்பு கூடு மட்டுமே இப்பொது அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் சொன்னேன். 



பின்பு அப்படியே நமது காடுகளின் சூழலுக்குள் அவர்களை திருப்பினேன். அவர்கள் அருகிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் பற்றி  சில தகவல்களை கேட்டேன். பின்பு தமிழ் நாட்டில் இருந்து அழிந்ததாக நம்பப்படும் "கான மயில்" "வரகு கோழி" பற்றி சில தகவல்களை சொன்னேன். பின்பு தங்க பல்லி பற்றியும், களக்காடு தலையணை, நம்பியார் மற்றும் பச்சையாற்றில் உள்ள அரிய மீன் இனங்களை பற்றியும் சுருக்கமாக சொன்னேன். எலிகள், முள் எலிகள், அலுங்கு, முயல் போன்றவை எப்படி நம் பகுதியில் மிக சாதாரணமாக காணப்படுகின்றன என்றும் சொன்னேன். மலை அணில் மற்றும் மர அணில் பற்றியும் சில சேதிககளை சொல்லிவிட்டு, பாலுட்டிகள் என்றால் என்ன என்றும் இந்தியாவில் உள்ள பாலுட்டிகள் எண்ணிக்கை பற்றி கூறினேன். இந்த எண்ணிக்கை ஆம் ..மொத்தம் உள்ள 423 இந்திய பாலுட்டிகளில் 4 இல் 1 பங்கு வௌவால்தான் என சொன்னேன். 115 வௌவால் இனங்கள் இந்தியாவில் உள்ளன என்று வௌவால் பற்றி பேச தொடங்கினேன். 





வௌவால்கள் பற்றிய தகவல்களான அவற்றின் வகைகள், காணப்படும் இடம், கண்பார்வை, எப்படிப் பறக்கிறது, உலகில் பெரிய மற்றும் சிறிய வௌவால், இடப் பெயர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு வௌவால் செய்யும் நன்மைகள், அழிவிற்க்கான காரணம் மற்றும் மாணவர்கள் எப்படி இந்த சிறிய வௌவால் இனங்களை பாதுகாக்கலாம் என்பன போன்ற அறிவியல் தகவல்களை சுவாரசியமாக சொன்னேன். பின்பு "உலகின் பெரிய வௌவால்" என்ற ஒரு வீடியோவை காட்டினேன். நான் சங்ககிரி மலையில் பார்த்த ஒரு வௌவால் பற்றிய என் அனுபவங்களை கூறினேன். வௌவால் எச்சம் எப்படி உரமாகிறது என்றும் சொன்னேன். பருவ நிலை மாறுபாடு வௌவால் இனங்களின் பறக்கும் திசையையும், ரூஸ்ட்ஐ விட்டு கிளம்பும் நேரத்தையும் எப்படி மாற்றி விட்டன என்றும் சொன்னேன். பின்பு கோவிலில் உள்ள வௌவால் எப்படி வாழிடம் இல்லாமல் மக்களால் துரத்தப்படுகின்றது என்றும் கூறினேன். 


வௌவால்களுக்காக பட்டாசை தியாகம் செய்த கிட்டாம்பளையம் கிராமம் பற்றியும் சொன்னேன். அனைத்து மாணவர்களையும் மூன்று குழுக்களாக பிரித்து குழுவிற்கு ஒரு குழு தலைவரை தேர்ந்தெடுத்தேன். நான் சொன்ன வௌவால் தொடர்பான தகவல்களை குழுத் தலைவர் அனைவரின் முன்பு வந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இப்போது Zoo Outreach வழங்கிய வௌவால் தகவல் பெட்டகத்தை வழங்கினேன். மீண்டும் ஒரு முறை விளக்கினேன். தயார் செய்வதற்காக பத்து நிமிடம் வழங்கினேன். ஒவ்வொரு குழு தலைவரும் முன்னால் வந்து அவர்கள் தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட வௌவால் பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு கைதட்டலுடன் அமர்ந்தனர். 






இது முடிந்தவுடன் அடுத்த செயல் முறையாக, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வௌவால் கறுப்பு வெள்ளை கோடுகள் உள்ள படங்களை கொடுத்து வர்ணம் (கலர்) செய்யும் செயல் முறையை ஆரம்பித்தேன். அவர்களுக்கு தேவையான பொருள்களையும் வழங்கினேன். இருபது நிமிடங்களுக்குள் மூன்று குழுக்களும் மிக வண்ண மயமாக இந்த வௌவால் படங்களுக்கு வண்ணம் செய்திருந்தார்கள். வண்ணம் செய்த படங்களை அனைவரின் முன்பும் காண்பித்துவிட்டு, இந்த படம் என்ன சொல்கின்றது என்று சொன்னர்கள். மிகப் பெரிய கைதட்டலை அனைவரும் வழங்கினோம். 











சிறிய இடைவெளிக்கு பின்பு "காந்தியடிகளின் சூழல் சிந்தனைகளை" சொல்லிவிட்டு வௌவால் பாதுகாப்பு பற்றிய உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டோம். 



இந்த அறையில் நான் அமைத்திருந்த சிறிய வௌவால் புகைப்பட கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். ஒரு பெரிய புன்னகையுடன், குழு புகைப்படத்துடனும் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். கடைசியாக திரு.மதிவாணன் நன்றிகளை தெரிவித்து கொண்டார். 




இந்த நிகழ்ச்சி நான் நினைத்தது போலவே மிக சிறப்பாக முடிந்தது. அனால் ஒன்று …  உலகத்தில் இருந்து மொத்தம் 247 வௌவால் இனங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டது என்ற ஒரு செய்தியை சொல்ல மறந்து விட்டேன். 

இந்த குழந்தைகள் இனி வரும் நாட்களில் வௌவால் பற்றிய  தகவல் பரப்பிகளாக இருப்பார்கள்; வௌவால்களை பாதுகாக்கும் இளைய மாணவர் படை இன்று இந்த கிராமத்தில் உருவானது என்று நினைத்து பெருமை பட்டு கொள்ளலாம்.     

இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிய திரு.மதிவாணன் அவர்களுக்கு என் நன்றிகள். எனக்காக வௌவால் தமிழாக்கத்தை வழங்கிய திரு. மாரிமுத்து, Zoo Outreach அவர்களுக்கும், எனக்கு ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர், முனைவர்.B.A. டேனியல்  அவர்களுக்கும் என் நன்றிகள்.  இந்த நிகழ்சிக்காக தகவல் புத்தகம், கேமரா, எழுது பொருள்கள், போஸ்டர் போன்றவை அளித்த என் Zoo Outreach அலுவலகத்திற்கும் என் நன்றி. அனைவரின் ஒத்துழைப்புடனும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. 

அன்புடன் 
பிரவின் குமார்
கோயம்புத்தூர் 

0 comments:

Post a Comment