About

Sunday, 17 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 27நம்மாழ்வாரின் வானகத்தில் ஒரு நாள் 

கடந்த மாதத்தில் ஒரு நாள் "காட்டுயிர்கள் குறித்த ஒரு நாள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கரூர் அருகே உள்ள கடவூர் கிராமத்தில் உள்ள நம்மாழ்வார் அய்யாவின் வானகத்திற்க்குச் சென்றிருந்தேன். அந்த ஊரின் இயற்கை சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட, பச்சை பசேலென இருந்தது அந்த இடம். பத்து நாள் "குழந்தைகளுக்கான புத்தாக்கப் பயிற்சி" நடைபெற்றது

இதில் ஒரு நாள், வனங்களை பற்றியும் அங்குள்ள விலங்குகளைப் பற்றியும் இந்த குழந்தைகளுடனும் மிகவும் வித்தியாசமான முறையில் சொல்லவும், பலவித செயல்பாடுகளுடன் கூடிய வகுப்பை நடத்தவும் நான் சென்றிருந்தேன். அதிகாலையில் நான் சென்றுவிட்டேன். திரு. ஏங்கல்ஸ் அவர்களை பார்க்க காத்திருந்தேன். அவர்கள் வர தாமதமாகும் என்றனர். 

அப்படியே நான் இந்த கானகத்தை சுற்றிப் பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். மெதுவாக சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டே பண்ணையை சுற்றினேன். மிக தெளிவாக, சரியாக திட்டமிடப்பட்ட இடம் இது என எனக்கு தோன்றியது. மரம், செடி, படரும் சிறுகொடி, தானியங்கள் என செழுமையாக இருந்தது இந்தப் பண்ணை. சிறிய சிறிய இடைவெளியில் கூட கற்றாழை வளர்க்கிறார்கள். அடுத்து நம் நாட்டு இன ஆடுகளைப் பார்த்தேன். பின்பு அவற்றை தொட்டுப் பார்த்துப் பரவசமாகினேன். மிகப் பெரிய காது உள்ள இந்த இன ஆடுகளுக்கு கொம்பு சற்று வித்தியாசமாதான் இருந்தது. சிறிது நேரம் அவைகளுடன் இருந்து விட்டு மெதுவாக நடந்தேன். அப்படியே மாணவர்களின் தப்பாட்டம். பறை சப்தம் மற்றும் சிலம்பத்தைப் பார்த்து லயித்துப் போனேன். அப்படியே நம்மாழ்வார் அவர்கள் வாழ்ந்த அறை, வாங்கிய பரிசுகள் மற்றும் அவருடைய சில அரிய புகைப்படங்களை பார்த்தேன். அய்யாவின் சமாதியைப் பார்த்து வணங்கிவிட்டு, அதன் மேல் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கும் மரங்களை பார்த்தேன். அரை மணி நேர ஓய்விற்குப் பிறகு நான் கிளம்பினேன். வகுப்பிற்க்குத் தயாரானேன். 

மூலிகை பானம் மற்றும் கஞ்சியை சாப்பிட்டு விட்டு நான் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அறைக்கு சென்றேன். ஒரு சில மாணவர்களின் உதவியுடன் நாங்கள் வகுப்பை சுத்தம் செய்தோம். கொஞ்ச நேரத்திலே வகுப்பு பளிச்சென ரெடி. நான் கொண்டு வந்திருந்த வண்ண வண்ண விலங்கு அட்டைகளையும், விலங்கு முகமுடிகளையும், புத்தகங்களையும், சில சிறுவர் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்தேன். நேரம் செல்ல செல்ல மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வகுப்பிற்குள் வந்தனர்.  தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாண-மாணவிகள் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வட்டமாக அமர வைத்து அவர்களின் பெயர், வகுப்பு, ஊர், பிடித்த விளையாட்டு போன்றவற்றை கேட்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். காடுகளின் வகைகள், உணவு சங்கிலி பற்றியும், ஐந்து வகை உயிர் குழுக்கள் பற்றியும் சொன்னேன்.

இந்திய காடுகள் பற்றி சொல்லிவிட்டு, புல்வெளிகள் மிகுந்த சூழலில் வாழும் சில விலங்குகளின் உதாரணங்களை சொன்னேன். தமிழகத்தின் சில பாலுட்டிகளைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு புதிர் விளையாட்டை மாணவர்களை விளையாடச் செய்தேன். மேலும் புதிரில் அவர்கள் கண்டறிந்த விலங்குகளைப் பற்றி பேச செய்தேன். இதில் பெரும்பாலும் பாலுட்டிகளும், பறவைகளும் இருந்ததால் மாணவர்கள் எளிமையாக பேசினார்கள். நான் அவர்களுக்கு தெரியாத விசயங்களான அவற்றின் எண்ணிக்கை, வழங்கு பெயர், காணப்படும் இடங்கள், சூழல் நன்மைகள் மற்றும் அவற்றின் அச்சுறுத்தல்கள் பற்றியும் சொன்னேன். 


எங்களால் இந்த உலகில் வாழவே முடியவில்லை என சொல்லும் குழந்தைகளின் வீடியோ ஒன்றையும் காட்டினேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு "பூண்டோடு உயிரிகள் அற்று போகுதல்" (Extinction) பற்றி சொன்னேன். பின்பு வௌவால் வகுப்பை துவக்கினேன். இதில் பங்கேற்பாளர்களை ஆறு குழுக்களாக பிரித்து அவர்களுக்கு வௌவால் தகவல் பெட்டகதையும், வௌவால் அட்டைகளையும் வழங்கினேன். குழுவிற்கு ஒரு குழு தலைவரை நிர்ணயித்தேன். 


பின்பு வௌவால்களின் வகைகள், இந்தியாவில் காணப்படும் வௌவால் இனங்கள், நமது பகுதியில் காணக்கூடிய இனங்கள், அரிய வௌவால் பற்றியும் சொன்னேன். வௌவால் எப்படி பறக்கின்றது, உலகின் / இந்தியாவின் பெரிய சிறிய வௌவால் எவை? இடப்பெயர்ச்சி, சூழலுக்கு செய்யும் நன்மைகள், வௌவால் இனங்கள் அழிவிற்கு காரணங்கள் பற்றியும் சொன்னேன். 

பின்பு பங்கேற்பாளர்களுக்கு பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு குழுத் தலைவர்களை வௌவால் பற்றி பேசச் செய்தேன். குழந்தைகள் மிகவும் ஆர்வமாக, நிறைய தகவல்களை சொன்னார்கள். பலர் அவர்கள் தனிப்பட்ட அனுபவத்தை சொல்லிவிட்டு, கைதட்டல்களை பெற்றனர். பின்பு வௌவால் பற்றிய சில கட்டுக்கதை / மூடநம்பிக்கைகளை பற்றியும், அறிவியல் உண்மைகளையும் சொன்னேன். 

வௌவால் போன்ற சிறிய, அதிசய உயிரினங்களை பாதுகாக்க தொடர் உறுதி மொழியை சொல்லிவிட்டு, ஒரு சிறிய வீடியோவுடன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் அறுபது குழந்தைகள் கலந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சி அறையில் வைத்திருந்த 'வௌவால் புகைப்பட கண்காட்சியை' மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர். குழந்தைகளுடன் பேசிகொண்டே இருந்தேன்...அவர்களுடனே சாப்பிட்டுவிட்டு, கோயம்புத்தூரை நோக்கி கிளம்பினேன். 


பாலுட்டிகள் குறித்த இந்த நிகழ்ச்சி நடத்த உறுதுணையாய் இருந்த தோழர் கார்த்திக் ராஜா, அஜாய் ராஜா, ஏங்கல்ஸ் ராஜா மற்றும் நம்மாழ்வார் அய்யாவின் வானகத்தில் உள்ள தோழர்களுக்கும் என் நன்றிகள்.            

வௌவால் குறித்த தகவல் பெட்டகத்தை வழங்கிய என் அலுவலகதிற்கும், வௌவால் தமிழாக்க புத்தகத்தை எனக்கு அளித்த திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள்.  


சிறிய விலங்குகளை பாதுகாக்க, கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

வாருங்கள் .. உலகில் உள்ள எல்லா உயிரிகளையும் ஓரே போல பாப்போம்...மதிப்பளிபோம். காப்பாற்ற முயல்வோம்....முடிந்தவரை நமது பகுதியில் அழிவில் \ ஆபத்தில் \ அச்சுறுத்தலில் உள்ளவற்றை பாப்போம்..பாதுகாப்போம்.   

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 


Reactions:

0 comments:

Post a Comment