About

Sunday 17 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 28



நன்னீர் பல்லுயிரியம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கொடைக்கானல்

கடந்த சூன் 26ல் இரண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நான் கொடைக்கானலுக்கு சென்றிருந்தேன். இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை "மேற்குத் தொடர்ச்சி மலை நன்னீர்  மேலாண்மையும், பாதுகாப்பும்" என்ற தலைப்பில் வடிவமைத்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை  ஜூ அவுட்ரீச் அமைப்பும், பழனி மலை பாதுகாப்பு இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி சிறப்பான சூழல் பள்ளிகளை ஏற்ப்படுத்துவதற்க்கான ஒரு நிகழ்வு ஆகும்





முதலாவது நிகழ்ச்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் அவர்களை சந்தித்துவிட்டு நாங்கள் மாணவர்களை சந்தித்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். முதலில் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு.அந்தோணி அவர்கள் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவர் பேசும்போது 'பள்ளிக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஆறு எப்படி சாக்கடையானது' என சொன்னார்கள்.  பின்பு பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு. பாலா அவர்கள் தண்ணீர் மாசுபாடுகள் பற்றியும் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் வேலைகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள். 





அப்புறமாக நான் அனைவருக்கும் சந்தோசமாக ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு, எல்லா குழந்தைகளின் பெயர், ஊர் மற்றும் கடைசியாக அவர்கள் சென்ற நன்னீர் ஸ்தலம்/இடம் பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டேன். பின்பு எல்லாரிடமும் அவர்கள் நன்னீரில் பார்த்த உயிரினங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். அவர்களின் சப்தத்தில் பக்கத்துக்கு அறை மாணவர்களும் எட்டி எட்டி பார்த்துவிட்டு சென்றனர். அப்படியே, நன்னீர் என்றால் என்ன? பூமியில் உள்ள நன்னீரின் அளவு போன்றவற்றை சொன்னேன். 




பின்பு நன்னீர் எனப்படும் நல்ல தண்ணீரின் பயன்கள் என்ன என்ன என்று அவர்களிடம் கேட்டேன். பின்பு தண்ணீர், தாவரங்கள் மற்றும் விலங்குகள் சூழ்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி சில உதாரனங்களுடன் சொன்னேன். முட்டை, வாழைப்பழம், பால், தர்பூசணி மற்றும் மனித உடலில் உள்ள தண்ணீரின் சதவிகித்தை சொன்னேன். அவர்கள் அடிக்கடி தண்ணீரில் பார்க்கும் உயிரினங்களின் பெயர்களை உரத்த குரலில் சொல்லச் சொன்னேன். பலரும் தட்டான், மண்புழு, பட்டாம்பூச்சி, மீன்கள், முதலை, நாரை, கொக்கு, பாம்பு, தவளை என சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்கள்சொல்ல மறந்ததை நான் சொல்லி நிறைவு செய்தேன். பின்பு இயற்கை நம் அன்னை என்ற வீடியோவைக் காட்டினேன். 




அப்படியே அவர்களை அடுத்த நிகழ்வான 'மனநிலையை புரிந்து கொள்ளுதல்' என்ற ஒன்றை வகுப்பிற்க்கு வெளியில் நடத்தினேன். இதில் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த மலைகள், காடுகள் மேலுள்ள அன்பை நேரிடையாக விளக்கினர். பின்பு அனைவரையும் வகுப்பிற்குள் அழைத்து, நன்னீர் புதிர் என்ற செயல்பாட்டை நடத்தினேன். அப்படியே தண்ணீர் சுழற்சி பற்றிய செய்திகளை கதை போலச் சொன்னேன். 

பின்பு நல்ல தண்ணீர் ஆதாரங்கள் எவை எவை ? அவற்றில் நமது ஊரில் எவை உள்ளன ? எனக் கேட்டேன். பின்பு "எங்களால் இந்த பூமியில் வாழவே முடியவில்லை" என உரத்த குரலில் பேசும் மாணவர்களின் வீடியோ ஒன்றைக் காட்டினேன். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளைப் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் தாவரங்களும், அவைகளின் பயன்களும் பற்றி சொன்னேன். பின்பு சோலைக் காடுகளைக் காப்போம் என்ற வீடியோவை காட்டிவிட்டு அமர்ந்தேன். மாணவர்கள் பலரும் ஆர்வமாக இந்த அனைத்து செயல்பாடுகளிலும் கலந்துகொண்டனர். 




அப்புறமாக, தோழர். அந்தோணி அவர்கள் கொடைக்கானலில் எங்கெல்லாம் சோலைக் காடுகள் உள்ளன என்றும், இன்று வளர்ச்சியும், சுற்றுலாவும், அந்நிய வந்தேரி மரங்களின் ஆதிக்கத்தால் எப்படி சோலைக் காடுகள் அழிவில், ஆபத்தில் உள்ளன என்று விளக்கினார்கள். 




பின்பு நான் தண்ணீர் மாசடைதல் பற்றியும், தண்ணீர் பாதுகாக்க சில வழிமுறைகள் பற்றியும் சொன்னேன். பின்பு ஜூ அவுட்ரீச் அமைப்பு வழங்கிய நன்னீர் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கி அதில் உள்ள சில நன்னீர் மீன்கள், தட்டான்கள் மற்றும் நன்னீர் நத்தைகள் பற்றி விளக்கி கூறினேன். அப்படியே நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ற வாசகம் அடங்கிய அட்டையை அனைவரும் பார்த்து, படித்து உற்சாகமடைந்தனர். நன்னீர் பாதுகாப்பு உறுதிமொழியை நான் சொல்ல, அனைவரும் பின்னால் சொல்லி உறுதியுடன் அமர்ந்தனர். கடைசியாக நண்பர். கார்த்திக் ராஜா, அவர்கள் நன்றியுரையுடன் இந்த நன்னீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்தது. 


மிக எளிமையான அறிவியலுடன், அதிகமான செயல்பாடுகளுடன் இருந்த இந்த நிகழ்ச்சி நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு அடிப்படை நன்னீர் உயிரிகள் பற்றியும், சோலைக் காடுகள் பற்றியும், தண்ணீர் பாதுகாப்பு பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.  


மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் "என் சத்ய சுரபி" பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். பள்ளித் தாளாளர் பத்மினி மணி அவர்களைச் சந்தித்து விட்டு, அவர்களின் அறிமுக உரையுடன் இந்த "நன்னீர் - பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, அனைத்து குழந்தைகளின் பெயர், வகுப்பு, ஊர், கடைசியாக பார்த்த/சென்ற நன்னீர் இடம் பற்றி சொல்ல சொன்னேன். இதில் பல குழந்தைகள் அருவியில் குளித்த அனுபவங்களையும், ஏரிக் கரையில் அமர்ந்து மீன்களையும், பறவைகளையும் பார்த்து ரசித்ததையும் பகிர்ந்து கொண்டனர். 




மேலும் அவர்கள் சமீபத்தில் சென்ற இன்பச் சுற்றுலாவில் அவர்கள் கண்டு கழித்த பசுமையான இடங்களையும் சொல்லி மகிழ்ந்தனர். பின்பு, மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும்,அங்குள்ள சில நன்னீர் உயிரிகள் பற்றியும் சொன்னேன். நன்னீர் என்றால் என்ன ?நமக்கு நன்னீர வழங்கும் ஆதாரங்கள் எவை எவை எனச் சொன்னேன். தண்ணீர் நமக்கு அடிப்படை ஆதாரம் என சொல்லி, ஒரு திறனாய்வு மதிப்பீடு என்ற ஒரு செயல் பாட்டை வகுப்பிற்கு வெளியில் நடத்தினேன். இதில் குழந்தைகள் சிறப்பாக கலந்து கொண்டனர். 




பின்பு அனைவரையும் 7 குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு குழுத் தலைவரை தேர்ந்தெடுத்தேன். ஓவ்வொரு குழுவிற்கும் நன்னீர் விலங்குகள் உள்ள சிறிய அட்டைகளைக் கொடுத்து அவற்றை இணைக்க செய்யும் ஒரு "புதிர் விளையாட்டை" விளையாடச் சொன்னேன். அனைவரும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு அனைத்து குழுக்களும் படங்களை இணைத்திருந்தர்கள். அப்புறமாக, குழுத்தலைவர் முன்னால் வந்து அந்த விலங்கின் நன்மைகளை சொல்லிவிட்டு கைத்தட்டல்களுடன் அமர்ந்தனர். அவர்களுக்கு மேலும் புரியும் வண்ணம் வகைப்பாடு என்ற ஒரு நிகழ்வை நடத்தினேன். 




பின்பு சோலைக் காடுகள் குறித்தும், நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் தாவரங்கள் குறித்தும், அவற்றின் சூழல் நன்மைகள் குறித்தும் சொன்னேன். சேகர் தத்தாத்ரி அவர்களின் சோலைக் காடுகளை காப்போம் என்ற வீடியோவை காட்டினேன். மாசுபாடுகள் பற்றி சொல்லிவிட்டு அமர்ந்தேன். 




தொடர்ந்து, திரு.அந்தோணி அவர்கள் தண்ணீர் தரம் அறியும் எளிய முறைகள் பற்றியும், நன்னீர் பாதுகாக்கும் உக்திகள் பற்றியும் சொன்னார்கள். அப்படியே நன்னீர் தகவல் பெட்டகத்தில் உள்ள வண்ண வண்ண மீன்களையும்,தட்டான்களையும் பார்த்து, அறையில் இருந்த நன்னீர் மீன்கள், தட்டான்கள், நன்னீர் முகமுடிகள் உள்ள அட்டைகளையும், வண்ண படங்களையும் பார்த்து விட்டு அமர்ந்தனர். 




அனைவரும் சேர்ந்து நன்னீர் பாதுகாப்பு தொடர் உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம். கடைசியாக தோழர். கார்த்திக் ராஜா அவர்கள் நன்றியுரையில் பேசும் போது, நாம் அனைவரும் எடுத்த இந்த உறுதி மொழியை நாம் கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.       




மெல்லிய பியானோ இசையின் பாடலுடன், மாணவ - மாணவிகளின் நன்றிகளுடன் இந்த மாலைப் பொழுதில் நிகழ்ச்சி முடிந்தது. இந்த பள்ளியின் தாளாளர். பத்மினி மணி அவர்கள் எனக்கு 'சர் டேவிட் அட்டன்ப்ரோ அவர்களின் The state of the Planet' என்ற குறுந்தகட்டை வழங்கினார்கள். அனைவருக்கும் நன்றியை சொல்லிவிட்டு குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.      

இந்த நிகழ்சிக்காக அழைத்த தோழர்.கார்த்திக் ராஜா, பழனி மலை பாதுகாப்பு இயக்கம், அவர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். எளிய முறையில் வன விலங்கு பாதுகாப்பு கருத்துக்களை வழங்க உதவிய முனைவர். தானியல் மற்றும் திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். கொடைக்கானல் அரசுப் பள்ளி மற்றும் என் சத்ய சுரபி பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கும், சக ஆசிரியைகளுக்கும்  என் நன்றிகள். 

பகிர்தல்கள்:

இந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நன்னீர் வகைப்பாடு, புதிர் மற்றும் மாசுபாடுகள் பற்றி சொன்னவைகள் எனக்கு எளிமையாக புரிந்தது. நமது காட்டையும், அங்குள்ள பல தாவர, விலங்குகளையும் பாதுகாக்க நிச்சயம் நான் உதவுவேன் என்று ஒரு மாணவன் சொன்னான். 




இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் தீவிரமாக எதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஆர்வத்திலும் உள்ளதை பார்க்க முடிந்தது. இந்த சிறப்பான மாணவர்கள், மிக சிறப்பான செயல்களைச் செய்வார்கள். நம்முடைய இந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, நிச்சயம் இந்த மாணவர்களிடத்தில் காட்டுயிர் கரிசனத்தையும், நன்னீர் அவசியத்தையும் புரிய வைத்திருக்கின்றது.  

ஒரு விதை -- வெளிச் சூழல் எப்படி இருந்தாலும் இங்கே மரமாகும்.  

அன்புடன்
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்                 

0 comments:

Post a Comment