About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 9 November 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VI


தொடரும் நம் சூழல் பயணங்கள்: VI 

நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: 

நன்னீர் உயிரினங்களின் பாதுகாப்பை பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக Zoo Outreach Organization மற்றும் Wildlife Information and Liaison Development society பலவிதங்களில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு மிக பெரிய நிகழ்வாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டயுள்ள ஆறு மாநிலங்களில் "நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு" நிகழ்ச்சியை அவர்கள் மொழியில், அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய அறிவியலுடன் நடத்துவது. 


அதற்கான முதல் நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் ஆரம்பமாகியது. பாளையம்கோட்டை புளோரன்சு சுவைன்சன் மேல்நிலைப்பள்ளியில் 14-10-2013 அன்று நெல்லை மாவட்ட பசுமை கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், சூழல் நண்பர்களுக்கும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை தேசிய பசுமைப்படையும், செயின்ட் சேவியர் கல்லூரியும், தமிழ் நாடு வனத்துறையும் இணைந்து நடத்தியது. இதில் ஆசிரியர். டேனியல் மற்றும் நான் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். வந்திருந்த அனைவர்க்கும், நன்னீர் பல்லுயிரினத்தின் அவசியமும், ஏன் பாதுகாக்கபட வேண்டும் என்ற தகவல்களை பல செயல்பாடுகள் மூலம் விளக்கினோம். இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட உதவி வன பாதுகாவலர் (ACF) சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், பேராசிரியர் செலவின் சாமுவேல், ஆசிரியர் பாக்யநாதன் இருந்தனர். 



Zoo Outreach Organization விஞ்ஞானி டேனியல் அவர்கள் அறிமுக உரையில் நன்னீர் அமைப்புகள், நன்னீர் உயிரினங்கள், தினசரி பயன்படும் நன்னீர் அளவுகள், நன்னீர் பல்லுயிரியம் பற்றி விவரித்தார். தேநீர் இடைவேளைக்கு பின்னர் நன்னீர் வகைகள் பற்றி சொன்னார்கள். பின்னர் நான் மேற்கு தொடர்ச்சி மலையின் விவரங்களை சொனேன். அதாவது மேற்குத்தொடர்ச்சி மலையின் நீளம், அகலம், மொத்த பரப்பளவு, ஆண்டு மழையளவு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பயனடையும் மாநிலங்கள், பாலக்காடு கணவாய் பற்றியும் விளக்கினேன்


அப்புறமாக டேனியல் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்கள் என்ற வரைபட செயல் விளக்கத்தை ஆறு பேர் கொண்ட குழுவாக செய்ய சொன்னார்கள். 



பின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் வரைபடத்தை கொடுத்து அதன் பெயர்களை அதில் எழுத சொன்னார்கள். இதில் முதலில் கொடுக்கப்பட்ட துண்டாக்கபட்ட வரைபடத்தை குழுக்கள் இணைத்து அதில் உள்ள பெரிய ஆறுகள் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிக ஆர்வமாக இதனைச் செய்தனர். பின்னர் ஆறுகளின் பெயர்களை ஓவ்வொரு குழுக்களும் சொன்னார்கள். பின்னர் நான் நான்கு வகை நன்னீர் குழுக்களை அறிமுகம் செய்தேன். அவையாவன: 
1. நன்னீர் மீன்கள் 
2. தட்டான்கள் & ஊசித்தட்டான்கள்
3. நத்தைகள் 
4. நீர் தாவரங்கள் 
அவற்றின் உலகளாவிய பரவல், எண்ணிக்கை விளக்கினேன். பின்னர் இந்தியாவில் அவைகளின் எண்ணிக்கையும், இந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அவைகளின் எண்ணிக்கையும் சொன்னேன். அப்புறமாக, நமது மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காண முடியாத பல நன்னீர் உயிரினங்கள் சிலவற்றை பற்றி சொல்லிவிட்டு, இந்த நான்கு வகை குழுக்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி சொன்னேன். 
மேலும் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள அழியும் விளிம்பிலுள்ள, ஆபத்திலுள்ள மற்றும் அச்சுறுத்தலில் உள்ள பலவகையான தாவரங்கள் பற்றி கூறினேன்.


அப்புறமாக நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் எப்படி நன்னீர் மற்றும் நன்னீர் உயிர்களை பாதுகாக்கும் என சொன்னேன். விஞ்ஞானி டேனியல் அவர்கள் நன்னீர் பல்லுயிரியம் என்ற (நாம் தயாரித்த) தகவல் பெட்டகத்தை (education pocket) அனைவர்க்கும் வழங்கினார். இதில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரிய சிறிய கையேடு, கையில் கட்டும் சிறிய ராக்கி, நன்னீர் உயிரின படம் போட்ட முகமூடி, வண்ண வண்ண மீன்கள் கொண்ட ஓட்டும் தாள்கள், விளம்பர அட்டை, நன்னீர் சட்டங்கள் குறிப்பு என அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது. அனைவரும் நன்னீர் உயிரினத்தின் அடையாளமாய் முகமுடிகளை அணிந்தும், ஒரு கையில் நன்னீர் பல்லுயிரியம் ராக்கியையும், கையில் விளம்பர அட்டையும் வைத்துக்கொண்டு எழுந்து நின்று நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ன கூறினார்கள். 
மேலும் அவர்கள் அனைவரும் தங்களின் நன்னீர் சூழலை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி உறுதி மொழி அட்டையில் எழுதி கொடுத்தார்கள். 

குறிப்பு:
மேற்கு தொடர்ச்சி மலை பல மில்லியன் மக்களுக்கு தினசரி வாழ்வாதாரமாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பலவகையான அரிய வகை தாவரவிலங்குகளுக்கு புகலிடமாகவும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றுநாம் அருந்தும் நீர்நமது சூழல்நமது அடுத்த சந்ததியினர்நமது பொருளாதாரம்நமது உடல்நலம் என எல்லாமே இந்த மலைகளையும்காடுகளையும்,  சார்ந்த மக்களையும் நம்பியே உள்ளது...அபரிமித மக்கள் தொகை பெருக்கமும்அதிக நுகர்வு கலாச்சாரமும்மாசுபாடுகளும்சுற்றுலாவும்இன்னும் பலவும் நமது அரிய வகை நன்னீர் உயிரினங்களை அழிவின் விளம்பில் நகர்த்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் இனிதே தன் பயணத்தை துவங்கி உள்ளது. இது இவ்வாறாக கேரளம், கர்நாடகம், மகாராட்டிரம், கோவா வரை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும். இந்த நன்னீர் விழிப்புணர்வு இங்கு மெல்ல ஒரு செடியாய் முளைத்திருக்கிறது..இது மென்மேலும் பெரிய ஆலமரமாய் நம் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும், அதனை ஒட்டிய ஊர்களிலும் நன்னீர் பல்லுரிய பாதுகாப்பை பரப்பும்..  



விடுமுறை நாள் என்றபோதும் 
ஆர்வமாய் வந்திருந்த ஆசிரியர்கள் ..
சூழல் பற்றி செய்தி சேகரிக்க 
கடைசிவரை அமர்ந்திருந்த ஊடக நண்பர்கள் ..
அச்சுறுத்தலில் நம் நன்னீர் விலங்குகளா
என பேசிக்கொண்டிருந்த இளம் மாணவர்கள் ..
சந்தோஷ முகங்களுடன் நம் 
பள்ளி குழந்தைகள் ..
என இந்த நிகழ்ச்சி அற்புதமாய் முடிந்தது ..



புன்னகையுடனும், குழு நிழற்படதிடனும் இந்த நிகழ்ச்சி இனிதே முடிந்தது. 

அனைவரும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் பிரவின் ....


  

Monday, 21 October 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் V. "வௌவால்கள் முக்கியத்துவம்"


தொடரும் நம் சூழல் பயணங்கள் V


கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் "வௌவால்கள் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மிக எளிமையான அறிமுகத்துடன் வௌவால் வகுப்பு தொடங்கியது. 

இந்த நிகழ்வு இந்திய வன உயிரின வார விழாவின் ஒரு நிகழ்வாகவே கருதினேன். அதிகம் அறியபடாத, கவனம் செலுத்தபடாத சிறிய பாலூட்டிகளைப் பற்றி சில விவரங்களை சொல்லவும், ஒரு சிறிய வீடியோவை காட்டவும் நான் சென்றிருந்தேன். குழந்தைகள் அனைவரும் ஆர்வமாக தங்கள் பெயர், வகுப்பு, கடைசியாக பார்த்த விலங்கு, அவர்கள் பார்க்க விரும்பும் விலங்கு ஆகியவற்றை சொன்னார்கள். பின்னர் நம்மை சுற்றி உள்ள விலங்குகளையும், அவற்றின் ஒரு சில சிறப்பம்சங்களையும் சொல்லிவிட்டு, காடுகளும், இந்த இயற்கை சூழலும் நமக்கும் அளிக்கும் நன்மைகளை சொன்னேன். 

விலங்குகளின் பங்கு மற்றும் உணவு சங்கிலியை ஒரு சிறிய பாடல் மூலம் எல்லாரும் சேர்ந்து சொல்லிவிட்டு, ஐந்து வகை உயிர் குழுமங்களை பற்றி சொன்னேன். அழிவில் நம் பசுங்காடுகள் என்ற வீடியோவை காண்பித்துவிட்டு, அனைவரையும் ஆறு குழுக்களாக பிரித்து "பிடித்த விலங்கு" என்ற தலைப்பில் ஓவியம் வரைய செய்தேன். அனைவரும் மிக சிறப்பாக ஓவியத்தை வரைந்தார்கள். 





அதில், யானை, குருவி, புழு மற்றும் வௌவால் போன்றவை இருந்தது. ஒவ்வொரு குழு தலைவரும் இந்த ஓவியத்தை காண்பித்துவிட்டு அந்த விலங்கின் முக்கியதுவத்தை சொல்லிவிட்டு சென்றார்கள். 








அப்புறமாக, வௌவால்கள் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை மரத்தடியில் நடத்திவிட்டு மீண்டும் அனைவரையும் குழுக்களாக பிரித்து அவர்களுக்கு Zoo Outreach Organization வழங்கிய தகவல் பெட்டகத்தை கையில் கொடுத்தேன். அதில் உள்ள பல அட்டைகளையும், புத்தகத்தையும், ஸ்டிக்கரையும் காண்பித்து விளக்கிவிட்டு, நான் வௌவால் பற்றிய பல செய்திகளை சொன்னேன். மிக சுலபமாக புரியும் வண்ணம், எளிய தமிழில், எடுத்துகாட்டுகள் மூலம் சொன்னேன். 









இந்த மாணவர்களுக்கு பத்து நிமிடம் நேரம் கொடுத்தேன். பின்னர் குழு தலைவர்கள் வந்து, அவர்கள் வௌவால் பற்றி புரிந்து கொண்டதை அனைவர் முன்னாலும் பகிர்ந்து கொண்டனர். அதிகமான செய்திகளை சொன்ன குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 




வௌவால்கள் பற்றிய சில புரிதல்கள்: 

1. உலகில் குட்டி போட்டு பால் கொடுக்கும், பறக்கும் பாலூட்டி வௌவாலே ஆகும். 

2. உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் ஆகும்.

3. வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்

4. பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்

5. இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது. 

6. கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

7. மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும் 

8. வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு

9. நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.

10. இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.

11. வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும் 

12. Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது. 

13. வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். 

14. இவை ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 பூச்சிகளை பிடித்து உண்ணும். 

15. இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது.

16. பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது

17. உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும் 

18. உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு. 
(நன்றி: வௌவால்கள் புத்தகம், Zoo Outreach)

நாம் இந்த வௌவால்கள் வாழிடங்களை பாதுகாக்க வேண்டும். இந்த அதிசய விலங்கின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும்  அனைவரிடமும் எடுத்து சொல்வது நம் கடமை. அதின் ஒரு சிறிய முயற்சியாக இந்த விழிப்புணர்வு (பள்ளிக்கூட) நிகழ்ச்சியாகும். 

அனைத்து மாணவர்களும் மிக உற்சாகமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களின் உன்னிப்பு திறன் என்னை மிக கவர்ந்தது. இந்த நிகழ்விற்காக ஆசிரியர்களும் மிக சிறப்பாக உதவினார்கள். மதிப்பிற்கு உரிய தங்கவேல் ஐயா, என் ஆசிரியர்கள் மாரிமுத்து, டேனியல் ஆகியவர்களுக்கு என் நன்றிகள். 

இனி ஒரு விதி செய்வோம்....இந்த காடுகளையும்...நம் விலங்குகளையும் பாதுகாக்க...

Wednesday, 21 August 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் IV



தொடரும் நம் சூழல் பயணங்கள் IV


கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 18) நான் கொடைக்கானல் அருகிலுள்ள "பண்ணைக்காடு" என்ற கிராமத்திலுள்ள பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு "வௌவால்களும் அவற்றின் அவசியமும்" என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த பழங்குடி குழந்தைகள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த மூன்று வருடங்களாக இங்கு தங்கி இருக்கிறார்கள், பண்ணைக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.   

நான் செல்லும் முன்னே அவர்கள் அனைவரும் வகுப்பில் இருந்தார்கள். காலை பத்து மணிக்கு நிகழ்ச்சியை தோழர். அசோக் ராஜன் தொடங்கி வைத்தார். 


நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களையும், அட்டைகளையும் பார்வைக்கு வைத்துவிட்டு, மிக இயல்பான, எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு வகுப்பை ஆரம்பித்தேன். 


பங்கேற்பாளர்கள் அனைவரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். 



பின்னர், கொடைக்கானலில் உள்ள விலங்குகளை பற்றியும், விலங்குகளின் முக்கியத்துவம் பற்றியும் சொல்லி விட்டு, அவர்களை ஐந்து குழுக்களாக பிரித்து, "அட்டைகளை சேர்த்தல்" விளையாட்டு விளையாடினோம். 


பின்னர் குழு தலைவர், அவர்கள் சேர்த்த விலங்கின் பெயரையும், அவற்றின் சூழல் நன்மைகளையும் சொன்னார்கள்.




"நம் காடுகள்" "அழியும் விலங்குகள்" என்ற காணொளியை காண்பித்துவிட்டு, அடுத்த நிகழ்வான "கேள்வி பதில் 10" பகுதிக்கு சென்றேன். 


பங்கேற்பாளர்களுக்கு பத்து கேள்விகள் கேட்கபட்டு, அவர்கள் பதில் சந்தோசமாக இருந்தால் அதற்குரிய இடத்திலும், வருத்தமாக இருந்தால் அதற்குரிய இடத்திலும், நடுநிலையாக இருந்தால் அதற்குரிய இடத்திலும் சென்று நிற்க வேண்டும். இதில் பெரும்பாலும் அனைவருமே எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து, மிக உற்சாகமாக கலந்துகொண்டனர். 


ஒவ்வொரு சிறிய, பெரிய விலங்குகளின் அவசியமும், அவற்றின் நன்மைகள் பற்றி விளக்கும் பாடல் ஒன்றை பாடி காட்டிவிட்டு, மதிய உணவை அவர்களுடன் சாப்பிட்டேன். 


பின்னர் குழந்தைகளுக்கு, "இயற்கை" காணொளியை காண்பித்துவிட்டு, energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்த நிகழ்விற்கு சென்றேன். 

மரங்கள் பற்றி அவர்கள் பல செய்திகளை சொன்னார்கள், நான் கொஞ்சம் அவேர்களுக்கு தெரியாத துணுக்குகளை சொல்லிவிட்டு, இன்றைய வகுப்பின் தலைபிற்குள் சென்றேன். ஆம். வௌவால்கள். 



அவர்களில் சிலர் வௌவாலை பிடித்து, சுட்டு உண்பதாகவும், அடிக்கடி இறைச்சிக்காக பிடிப்பதாகவும் சொன்னார்கள். தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள தொடர்பைச் சொல்லிவிட்டு, வௌவால்கள் குறித்த தகவமைப்பு, அவற்றின் குணங்கள், வாழிடம், வகைகள், சிறப்பியல்புகளை சொன்னேன். 


அனைவரும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, Zoo Outreach Organization வழங்கிய வௌவால் அட்டைகள் அடங்கிய சிறிய பாக்கெட்டை (BAT EDUCATION) கொடுத்து, அவர்களுக்கு புரியும் வண்ணம் வௌவால் குறித்த நிறைய தகவல்களைச்  சொன்னேன். 


"வௌவால்க்காக தீபாவளியன்று பட்டாசை தியாகம் செய்த கிட்டாம்பாளையம் கிராமம்" என்ற ஒரு உண்மை செய்தியை இந்த குழந்தைகளுக்கு சொல்ல மறந்துவிட்டேன். 


வௌவால் பொம்மை மூலமாக சில கருத்துகளை சொன்னேன். இந்த குழந்தைகள் மிக சுலபமாக புரிந்துகொண்டனர், என்னிடம் சில கேள்விகளும் கேட்டனர். உலகத்தில் மிக பெரிய வௌவால் - பற்றிய ஒரு சிறிய வீடியோவை காண்பித்தேன். அப்புறமாக வௌவால் அழிவிற்கு காரணிகள், அதை எவவாறு நாம் பாதுகாக்கலாம் என்பன போன்ற சில கருத்துக்களை சொன்னேன். 


கடைசியாக அனைவரும் எழுந்து நின்று நம் காடுகளையும், விலங்குகளையும், குறிப்பாக இந்த பழந்தின்னி வௌவால்களையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொன்டனர். 


தோழர் அசோக் ராஜன் நன்றி உரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

அடிப்படையில் இந்த குழந்தைகள் எப்போதும் சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு விலங்குகள், தாவரங்களை இனம் கண்டறியும் அடிப்படை உக்திகள் தெரிகிறது, நான் கண்டேன்.

இந்த கொடைக்கானல் வனங்களிலே வாழும் இவர்களை மேலும்  மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இந்த வனத்தையும், விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரு நல்ல மாணவர்களாக, அடிப்படை அறிவியல் மேல் ஆர்வம் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களாக உருவாகலாம். 


துள்ளலான குழந்தைகள், ஓயாமல் பெய்த மழை, அமைதியாய் அசையும் மரங்கள், ஆரவாரத்தில் நான்..அதே சந்தோசத்துடன்...இந்த நாள் மிக சிறப்பாக அமைந்தது. 


இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு BAT EDUCATION POCKET வழங்கிய என் ஜூ அலுவலக, ஆசிரியர்கள் தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். 

                                                        **********************

Tuesday, 13 August 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் III




தொடரும் நம் சூழல் பயங்கள் III

கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 11) நானும் என் தோழியும் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் என்ற மலை கிராமத்திற்கு, குழந்தைகளுகான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தோம். பில்லுரில்  உள்ள கி ஸ்டோன்- அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையத்திலேருந்து நாங்கள் கி-ஸ்டோன் வாகனத்தில், காட்டின் வழியே, கரடு முரடான பாதை வழியாக பில்லூர் போய் சேர்ந்தோம். இந்த சாலையில் போகும் போது "எப்படித்தான் இந்த பகுதி மக்கள் இந்த ரோட்டில் போகிறார்கள்" என்ற உணர்வு வந்தது.  

                      


இந்த ஊர் மிக அழகாகவும், அதிகம் ஆள் நடமாட்டமில்லாததாக இருந்தது. "வன விலங்குகளும் காடுகளும்" என்ற பொதுவான தலைப்பில் நிகழ்ச்சியை வடிவமைத்திருதோம். நாங்கள் வனவிலங்குகளின் அட்டைகளை சுவற்றில் ஒட்டி கொண்டிருந்தோம். குழந்தைகள் ஒருவர் ஒருவராக வந்துகொண்டு இருந்தனர். மிக எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்துடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினோம். 

                      


எப்போதும் நாம் குழந்தைகளை அறிமுகபடுத்தும் அதே Know each other விளையாட்டு மூலமாக அவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். பின்னர் "வன விலங்குகள்" என்ற தமிழ் வீடியோ காண்பித்துவிட்டு, அவர்களை சுற்றி உள்ள விலங்குகளை பற்றி சில செய்திகள் சொன்னோம்.  

பின்னர் ஐந்து வகை உயிர் குழுக்களை பற்றி அட்டை மூலமாக விளக்கினோம். பின்னேர் அவர்களையும் திரும்ப சொல்ல சொன்னோம். அப்புறமாக "ஐலசா" என்று முடியும் ஒரு நாட்டுப்புற குழு பாடலைப் பாடிவிட்டு  அதன் கருத்துகளை கூறினேன்.  பறப்பன, ஊர்வன, இருவாழ்விகள், மீன்கள், பாலுட்டிகள் பற்றி உதாரணங்களை சொல்லிவிட்டு, தவளையின் வாழ்க்கை சுழற்சியை படம் மூலமாக விளக்கிச் சொன்னேன். 


பின்னர் energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை முடித்துவிட்டு, அடுத்த அடுத்த நிகழ்வான "குழு வரைபடம்" பகுதிக்கு சென்றோம். 

                       

மதிய உணவுக்கு பின்னர் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஐந்து குழுவாக பிரிந்து "சூழல் மாசுபாட்டில் நம் விலங்குகள்" என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படம் வரைந்து, அதன் விளக்கங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் சொன்னார்கள்.








அப்புறமாக வௌவால், தவளை, பூச்சி மற்றும் தேனீ, பொம்மைகள் கொண்டு அவற்றின் சூழல் முக்கியத்துவம் பற்றி சொன்னோம். 

முக்கியமாக வௌவால் குறித்த தகவல்களை குழந்தைகள் மிக சுலபமாக புரிந்து கொண்டு, கேள்விகளையும் கேட்டார்கள். எளிமையாக புரியும் வண்ணம் குழந்தைகளுக்கு சொல்லிவிட்டு, சூழலை காப்பதில் நம் பங்கு என்ன என்பதை கூறிவிட்டு "காடு அழிவு" பற்றி வீடியோ காண்பித்தேன்.

பின்னர் அனைவரும் எழுந்து நின்று, நம் காடுகளையும், நம் விலங்குகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்து கொண்டோம். அனைவர்க்கும் விலங்கு அட்டைகளும், பென்சில்களும் வழங்கிவிட்டு, நன்றியுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.

  

இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிய கி- ஸ்டோன் நண்பர்களுக்கும், Zoo Outreach ல் உள்ள உயர்திரு. டேனியல் மற்றும் உயர்திரு.மாரிமுத்து ஆகியவர்களுக்கும் என் நன்றிகள். 


இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யோகமாக, இனிப்புகளை வழங்கிய 

என் நண்பன் 

நவீன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

மிக சிறப்பான மனிதர்களால் மிக சிறப்பான, சிறந்த செயல்களை 

செய்யமுடியும். நாம் 

அனைவரும் மிக சிறப்பானவர்களாக மாற என் வாழ்த்துக்கள். 

*****************



Monday, 5 August 2013

தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II



தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II 


கடந்த ஞாயிறு (28 ஜூலை) அன்று திருநெல்வேலியில் உள்ள The Florence Swainson Higher Secondary School for the deaf க்கு ஒரு சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன்

எப்போதும் போல அதே சந்தோசத்துடன், நானும் என் தோழர் வெங்கடேஷ் பாபுவும் வகுப்பறையை, தலைப்பிற்கு ஏற்றவாறு தயார் செய்தோம். கொண்டு வந்திருந்த அட்டைகளை ஒட்டிவிட்டு தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பள்ளிதான் 2004 வருடத்திற்கான மாநில சூழல் விருதை பெற்ற பள்ளி, சூழல் அக்கறை பற்றி கவனத்துடன் செயல்படும் பள்ளி எனவும் தெரியவந்தது. இந்த அறை "சுற்றுச்சூழல் பரப்பு மையம்" என்ற பெயரை தாங்கி நிற்க்கிறது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உதவியுடன் சூழல் குறித்த எண்ணற்ற பதாகைகள் இருந்தன. மேலும் தமிழ்நாட்டின் தேசிய விலங்கு, பூ, மரம், பறவை படங்கள் பளிச்சென தெரிந்தது.   

"உங்களை சுற்றி விலங்குகள்" என்ற தலைப்பில் நான் பேசுவதற்காக தயாரானேன்

சுமார் அறுபது மாணவ மாணவியர்கள் அறையில் இருக்க, தலைமை ஆசிரியரின் சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது



தோழர் வெங்கடேஷ் பாபுவிற்கு ஐந்தாவது நிகழ்ச்சி (இதே பள்ளியில்) எனவே அவர் குழந்தைகள் அனைவரையும் மிக சுலபமாக புரிந்துவைத்திருந்தார்.மேலும் மிக எளிமையாக- தன்னம்பிக்கை, கற்பனைசக்தி, வெற்றி போன்ற தலைப்புகளின் அவருக்கே உரிய மாறுபட்டு சிந்திக்கும் திறனுடன் குழந்தைகளுடன் பேசினார். மாணவர்களும் மிக எளிமையாகவும், சகஜமாகவும் வகுப்பில் இருந்தனர். அவருடைய ஒவ்வொரு கருத்துகளையும் மொழிபெயர்ப்பாளர் அக்கா விரைவாக குழந்தைகளுக்கு சொன்னார்பின்னர் நான் நம்மை சுற்றி இருக்கும் விலங்குகள் பற்றி அவர்களிடம் கேட்டுவிட்டு, ஒரு சிறிய சூழல் விளையாட்டு நடத்திவிட்டு "தேன்சிட்டுவின் கதை" காணொளியை காண்பித்தேன்
அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து குதூகலித்தனர்

பின்பு, மரங்களின் பயன்பாடு மற்றும் மருத்துவகுணமுள்ள தாவரங்கள் பற்றியும் அவர்கள் நிறைய தகவல்களை சொன்னார்கள் . நானும் அதை தொடர்புடைய தகவல்களை சொன்னேன்


பின்னர், குழந்தைகளுக்காக நான் கொண்டுசென்றிருந்த பூச்சி, தவளை, வௌவால், தேனீச்சீ பொம்மைகளை (Finger Puppets) காட்டி அவற்றின் முக்கியத்துவம், சூழல் சமநிலையில் அவைகளின் பங்கு குறித்து சில தகவல்களை சொன்னேன்

நாளை புலி நாள் (Tiger Day) என்பதால் கொஞ்சம் புலிகள் பற்றி சொல்லிவிட்டு, சேகர் தத்தாத்ரியின் 'புலிகள் பற்றிய உண்மை' என்ற ஆவணப்படம் போட்டு காண்பித்தேன்



கடைசியாக Zoo Outreach, விலங்கு வாழ்த்து அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோழர் வெங்கடேஷ் பாபுவின் (Eventura) மூலமாக மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியரின் நன்றிகளுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்ததுஇந்த குழந்தைகளுடைய சிறப்பான செயல் செய்யும் திறன், கற்பனை சக்தி, மன திடம், அனைவரையும் அரவணைக்கும் பண்புகளை கண்டு சந்தோஷப்பட்டோம். இனி வரும் காலங்களில் இவர்கள் நிச்சயம் ஒரு சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாக வருவார்கள்.



இந்த நிகழ்ச்சிக்காக அனைத்துவித கருத்துகளையும் வழங்கிய மதிப்பிற்குரிய என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்தோழர் வெங்கடேஷ் பாபு, மற்றும் தலைமை ஆசிரியர்  அவர்களுக்கும் என் நன்றிகள். 

வாழ்த்துகளுடன், 
பிரவீன்